புதிய சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி மறுப்பு!

Webdunia

வியாழன், 1 நவம்பர் 2007 (13:47 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி வழங்க கூடாது என்ற உத்தரவை மும்பை உயர் நீதி மன்றம் மறுபரீசிலனை செய்ய மறுத்து விட்டது.

மும்பை உயர்நீதி மன்றத்தில் அசோக் குல்கர்னி என்பவர் மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய சர்க்கரை ஆலைகள் துவங்க, சர்க்கரை கமிஷன் அனுமதி வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் புதிய சர்க்கரை ஆலைகள் தொடங்க அனுமதி அளிக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.

மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜே.என்.படீல், அம்ஜத் சய்யீசு ஆகியோரைக் கொண்ட அமர்வு நீதிமன்றத்தில், மகாராஷ்டிர அரசு இந்த உத்தரவை தளர்த்துமாறு முறையிட்டது.
இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், இந்த வருடமும் கடந்த வருடத்தை போலவே அதிகளவு கரும்பு உற்பத்தியாகி இருக்கின்றது, சென்ற வருடம் அதிகளவு கரும்பு உற்பத்தியானதால் பிரச்சனைகள் உருவாகி மாநில அரசு தலையிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. எனவே புதிய சர்க்கரை ஆலைகள் தொடங்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கூறினார்.

அட்வகேட் ஜெனரல் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், புதிய சர்ககரை ஆலைகள் தொடங்க அனுமதி வழங்கினாலும் கூட, இந்த வருடம் எவ்வித பயனும் இருக்காது. ஏனெனில் ஏற்கனவே கரும்பு அரவை ஆரம்பித்து, சர்க்கரை ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதியே தொடங்கி விட்டது. அத்துடன் புதிய சர்க்கரை ஆலை அமைக்க மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை ஆகும். ஏற்கனவே உள்ள சர்க்கரை ஆலைகளின் உற்பத்தியை அதிகரிக்க அனுமதி வழங்குவது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்கும் என்று கூறினார்கள்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 23ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்