இயற்கை ரப்பரின் விலை உயர்வால், டயர் தொழிற்சாலைகளின் இலாபம் குறைகிறது என்று அப்போலோ டயர் நிறுவனத்தின் சேர்மன் ஆன்கர். எஸ். கன்வர் தெரிவித்தார்.
கொச்சியில் செய்தியாளரிகளிடம் கன்வர் பேசும் போது, கடந்த சில மாதங்களில் இயற்கை ரப்பரின் விலை அதிகரித்து உள்ளது. இதனால் குறைந்த பட்சம் மூன்று முதல் ஐந்து விழுக்காடு வரை டயர் தயாரிப்பு நிறுவனங்களின் இலாபம் குறைந்துள்ளது.
இந்திய டயர் நிறுவனங்கள், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறைந்த விலையுள்ள டயருடன் போட்டியிட வேண்டியுள்ளது. இறக்குமதி செய்யப்புடும் டயருக்கு இறக்குமதி வரி 20 விழுக்காடு விதிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்படும் இயற்கை ரப்பருக்கு 22.5 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. எனவே இயற்கை ரப்பரின் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்.
ரப்பர் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை டயர் நிறுவனங்கள் எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் ரப்பர் விலை அதிகளவு அதிகரித்தால் எதிர் விளைவுகளே ஏற்படும். ஏனெனில் டயர் தயாரிக்க ஆகும் மொத்த செலவில் 50 விழுக்காடு மூலப் பொருளான ரப்பருக்கே செலவாகிறது.
அப்போலோ டயர் நிறுவனம் தற்போது டயர் தயாரிக்க 15 விழுக்காடு செயற்கை ரப்பரை பயன்படுத்துகிறது. இதை 30 விழுக்காடாக உயர்த்த உள்ளோம்.
தற்போது இந்தியாவில் உள்ள டயர் தொழிற்சாலைகள் வருடத்திற்கு 8 இலட்சத்து 50 ஆயிரம் டன் இயற்கை ரப்பரை பயன்படுத்துகின்றன. அதில் அப்போலோ டயர் 15 விழுக்காடு பயன்படுத்துகிறது.
தற்போது அப்போலோ டயரின் விற்று- முதல் வருடத்திற்கு 100 பில்லியன் டாலராக இருக்கின்றது. இதை அடுத்த இரண்டு வருடங்களில் இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். நாங்கள் உற்பத்தி செய்யும் டயரில் 20 விழுக்காட்டை ஏற்றுமதி செய்கின்றோம். தென் ஆப்பிரிக்காவில் நலிவுற்ற நிலையிலுள்ள டன்லப் டயர் தொழிற்சாலையை வாங்கி சீரமைக்க போகின்றோம் என்று கன்வர் தெரிவித்தார்.