தொழில் வளர்ச்சியை அதிகரிக்க வங்கிகள் கடனுக்கு விதிக்கும் வட்டியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.
இந்க வருடம் ஜூலை மாதத்தில் தொழில் வளர்ச்சி 7.2 விழுக்காடாக உள்ளது. சென்ற வருடம் ஜூலை மாதத்தில் தொழில் வளர்ச்சி 13.2 விழுக்காடாக இருந்தது.
அத்துடன் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வளர்ச்சியும் குறைந்துள்ளது. இந்த ஆண்டு, இந்த துறையின் வளர்ச்சி விகிதம் மே மாதத்தில் 11.7 விழுக்காடாக இருந்தது. இது ஜூன் மாதத்தில் 9.8 விழுக்காடாக குறைந்தது. ஜூலை மாதத்தில் மேலும் குறைந்து 7.2 விழுக்காடானது.
தொழில் துறையின் வளர்ச்சி குறைந்தால், அது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். அத்துடன் பொருட்கள் உற்பத்தி செய்ய தேவையான கச்சாப் பொருட்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு இனங்கள் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு கிடைக்கும் வரி வருவாய் பாதிக்கப்படும்.
இதனால் மத்திய அரசு கவலை அடைந்துள்ளது.
தொழில் வளர்ச்சியை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், வங்கி இயக்குநர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த கூட்டத்தில் ப. சிதம்பரம் கூறியதாவது :
ஜூலை மாதத்தில் தொழில் வளர்ச்சி குறைந்திருப்பது கவலை அளிக்கிறது. தொழில் வளர்ச்சி குறையக்கூடாது. இதை அதிகரிக்க எல்லா நடவடிக்கையும் எடுக்க வேண்டும். தொழில் வளர்ச்சி குறைந்தால் அது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். உற்பத்தி பொருட்களின் விலை வாங்கும் அளவில் நிர்ணயித்து, இதன் தேவையை அதிகரிக்க வேண்டும். இதற்கு பல்வேறு நிதி உதவிகள் செய்ய வேண்டும்.
வளர்ச்சியை அதிகரிக்க வங்கிகள், வட்டி விகிதங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும். வங்கிகள் தொழில் துறையினர் கடன் வாங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று சிதம்பரம் கூறியுள்ளார்.
இதில் அதிகமான வட்டியினால் வாகனங்களின் விற்பனை குறைந்திருப்பதை, வாகன உற்பத்தியாளர்கள் சுட்டிக் காட்டியதாக டாடா மோட்டார் மேலாண்மை இயக்குநர் ரவிகாந்த் தெரிவித்தார்.
வட்டி உயர்வு முக்கியமான விஷயமாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாண்மை இயக்குநர் கே.சி. சக்கரவர்த்தி, வங்கிகள் சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என நிதி அமைச்சர் வங்கிகளை கேட்டுக் கொண்டார். நாங்கள் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான வழியை காண முயற்சிப்போம் என்று கூறினார். ஆனால், பஞ்சாப் நேஷனல் வங்கி வட்டியை குறைக்குமா என்று கேட்டதற்கு கருத்து தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
பாரத ஸ்டேட் வங்கியின் மேலாண்மை இயக்குநர் பட், ரிசர்வ் வங்கி அக்டோபர் 30 ஆம் தேதி இடைக்கால நிதி கொள்கையை அறிவிக்கும் வரை, இப்போதுள்ள வட்டி விகிதங்களே தொடரும் என்று தெரிவித்தார்.
பலாபூர் இன்டஸ்டிரிஸ் தலைவர் கவுதம் தபார், பேப்பர் உற்பத்தி துறையும் வட்டியை குறைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வருடம் பேப்பர் தேவை அதிகமாக இருக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையின் பாதிப்பு, அடுத்த நிதியாண்டில் தான் தெரியும் என்று கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான ஓ.பி.பட்., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான கே.வி.காமத், பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவரும் மேலாண்மை இயககுநருமான கே.சி.சக்கரவர்த்தி, பாங்க ஆப் இந்தியாவின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான பி.எஸ்.நாராயண சாமி, மாருதி உத்யோக் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான ஜெகதீஷ் கட்டார், டாடா மோட்டார் தலைமை செயல் அதிகாரி ரவி காந்த், மகேந்திரா அண்ட் மகேந்திரா செயல் இயக்குநர் பாரத் ஜோஷி மற்றும் பலாப்பூர் இண்டஸ்டிரிஸ் தலைவர் கவுதம் தபார் ஆகியோர் கலந்து கொண்டனர்.