நம் நாட்டில் துணி வாங்கி நம் நாட்டிலேயே விற்பனை செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியை சமீபத்தில் மத்திய ஜவுளி அமைச்சகம் முற்றிலும் நீக்கியுள்ளது என விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி கவுன்சில் தலைவர் டாக்டர் மதிவாணன் தெரிவித்தார்.
கடந்த மாதம் டில்லியில் கூடிய மத்திய ஜவுளி அமைச்சகக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அதில், இந்தியாவில் ஜவுளி தொழிலை மேம்படுத்தும் காரணி குறித்து ஆராயப்பட்டது.
மாநில வாரியாக ஜவுளி துறையில் சிறந்து விளங்கும் நகரங்களில், அங்கு தயாரிக்கப்படும் ஜவுளிக்கு தேவையான வசதி ஏற்படுத்தி தர முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் சேலம், கரூர், ஈரோடு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. சேலத்தில் ஆயத்த ஆடை மற்றும் நெய்தல் ஜவுளி, கரூரில் வீட்டு உபயோக ஜவுளி, ஈரோட்டில் பதப்படுத்தப்பட்ட ஜவுளி போன்றவற்றை மேம்படுத்த திட்டமிடப்பட்டது.
மூன்று மாவட்டத்திலும் ஜவுளி மேம்பாட்டுக்கான தேவை குறித்து ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்களிடம் கருத்து கேட்டு அக்டோபர் 7க்குள் மத்திய ஜவுளி அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதன்படி, நேற்று சேலம் பொன்னம்மாப்பேட்டை ஐ.ஐ.ஹெச்.டி., அரங்கத்தில் நடந்த ஜவுளி மேம்பாட்டு கூட்டத்தில் விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி கவுன்சில் தலைவர் மதிவாணன் கலந்து கொண்டனர்.
அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவில் தயாராகும் ஜவுளி ரகங்கள் தரத்துக்கு ஏற்ப உலகளவில் முன்னணியில் உள்ளது. அதில், ஜூட் ரக ஜவுளி முதலிடத்தில் உள்ளது. ஜவுளி துறையில் ஆண்டுதோறும் 15 சதவீதம் வளர்ச்சி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதற்காக அரசு ஜவுளி உற்பத்திக்கு உடனடி அனுமதி வழங்குகிறது. இருந்தாலும், தொழில்நுட்ப துணி உற்பத்தி வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே உள்ளது. அதில், மோட்டார், மெடிக்கல் துறைக்கு தேவையான ஒரு மீட்டர் துணி ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை விற்பனையாகிறது.
அதுவே சாதாரண துணிகளுக்கு ரூ. 30 முதல் ரூ. 100 வரையே கிடைக்கிறது. அதற்கு காரணம் ஜவுளி உற்பத்தியாளர் இடையே விழிப்புணர்வு இல்லாதது தான். தேவையான வசதிகளை செய்து தர அரசு தயாராக உள்ளது. வீட்டு உபயோக தேவைக்கான படுக்கை, ஜன்னல் விரிப்பு போன்றவற்றின் ஏற்றுமதி 2.7 சதவீதமாக உள்ளது.
திருப்பூரில் ஆண்டுதோறும் ரூ.பத்தாயிரம் கோடிக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கு காரணம் தொழில் முனைவோர் இடையே உள்ள ஆர்வம். நாமே தயாரித்து ஜவுளிகளை விற்பனை செய்வதை விட, மார்க்கெட்டில் தேவையை கருதி அதற்கேற்ப உற்பத்தியில் ஈடுபட வேண்டும்.
இங்குள்ள உற்பத்தியாளர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இந்தியாவில் 125 ஜவுளி தொழில் மையம் உள்ளது. ஜவுளி உற்பத்தியாளர்களுக்கான "டப்' திட்டத்தில் புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சமீபத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் துணி வாங்கி, இந்தியாவிலேயே விற்பனை செய்தால் இறக்குமதி வரியை மத்திய ஜவுளி அமைச்சகம் முற்றிலும் நீக்கியுள்ளது என்று அவர் பேசினார்.