கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களான மாவு (ஆட்டா) மைதா, ரவை போன்ற பொருட்களுக்கு இறக்குமதி வரி இல்லாமல், இறக்குமதி செய்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது என்று மத்திய உணவுத் துறை செயலாளர் தெரிவித்தார்.
டெல்லியில் அகில இந்திய அரவை ஆலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் 67 வது ஆண்டு மாநாடு நடைபெற்றது. இதில் உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் டி.நந்தகுமார் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி வரி இல்லாமல், கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் மாவு (ஆட்டா), மைதா மாவு, ரவை ஆகியவைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. உள்நாட்டில் கோதுமை தேவையான அளவு கிடைத்தால், இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை என்று தெரிவித்தார்.
மத்திய அரசு அரவை ஆலைகள் இறக்குமதி வரி செலுத்தாமல் கோதுமை இறக்குமதி செய்து கொள்ள இந்த வருடம் டிசம்பர் இறுதி வரை அனுமதி வழங்கி உள்ளது. இந்த சங்கத்தினர், இதை மேலும் நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளிக்கும் போது, இதை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய அதிகாரிகள் மட்டத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. அரவை ஆலைகள் கோதுமையை, இறக்குமதி வரி இல்லாமல் இறககுமதி செய்ய கேட்கின்றனர். அதே நேரத்தில் இதன் தயாரிப்புகளை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அவர் வியப்பு தெரிவித்தார்.
இந்த மாநட்டில் இந்திய உணவுக் கழகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அலோக் சின்கா பேசும் போது, கோதுமை உள் நாட்டில் தேவையான அளவு, கட்டுப்படி ஆக கூடிய விலையில் கிடைத்தால், உணவு கழகம் இருப்பில் வைத்துத்துள்ள கோதுமையை, அரவை ஆலைகளுக்கு வெளிச் சந்தை விற்பனை முறையில், விற்க வேண்டிய தேவை இருக்காது என்று கூறினார்.
கோதுமை இறக்குமதி செய்வதற்கு 50 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் கோதுமை தயாரிப்புகளை இறக்குமதி செய்ய 35 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
இந்த வருடம் உள் நாட்டு கோதுமை விளைச்சல் குறைவாக இருப்பதாக கூறி, மத்திய அரசு, இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்கு, இறக்குமதி வரி செலுத்த தேவையில்லை என்று சலுகை வழங்கியுள்ளது
தற்போது சர்வதேச சந்தையில் கோதுமை விலை உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்படு்ம் கோதுமை, இந்திய துறைமுகங்களுக்கு வந்து இறங்கும் போது, ஒரு டன் 400 டாலருக்கும் அதிகமாக அடக்கவிலையாகிறது. இதனை ரூபாய் மதிப்பில் கூறினால் அடக்கவிலை கிலோ ரூ 16.
டெல்லி தானிய சந்தையில் தாரா ரக கோதுமை கிலோ ரூ. 10.30 என்ற அளவில் கிடைக்கிறது. இங்கு தென்னிந்தியாவில் உள்ள அரவை ஆலைகள் கொள்முதல் செய்யும் போது, அரவை ஆலைகளுக்கு வந்து சேர, போக்குவரத்து கட்டணமும் சேர்தது அடக்க விலை ரூ. 12 தான் ஆகும்.