டெல்லியில் வியாபாரிகளின் எதிர்ப்பால் ரீலையன்ஸ் ஃப்ரஷ், சுபிக்சா கடைகள் மூடப்பட்டன!

Webdunia

வியாழன், 20 செப்டம்பர் 2007 (18:20 IST)
பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய வர்த்தக நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபடத் துவங்கியுள்ளன. இதற்காக பெரு நகரங்களிலும், முக்கியமான நகரங்களிலும் சங்கிலித் தொடர் போல் கடைகளை திறந்து வருகின்றன. இதில் மளிகை, காய்கறி, பழங்கள், தினசரி தேவைப்படும் மளிகை பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்கின்றன.

சில்லரை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டைச் சேர்ந்த பெரிய நிறுவனங்களை அனுமதிக்க கூடாது. இதனால் இலட்சக்கணக்கான சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என தொடர்ந்து வியாபாரிகள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த எதிர்ப்பிற்கு இடையே ரிலையன்ஸ் நிறுவனம் டெல்லி, சென்னை உட்பட முக்கிய நகரங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதற்காக ரிலையன்ஸ் ஃப்ரஷ் என்ற பெயரில் சில்லரை விற்பனை கடைகளை திறந்துள்ளது. இதே போல் சுபிக்சா நிறுவனமும் மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகின்றது.

இன்று தலைநகர் டில்லியில் ராஷ்ட்டிரிய வியாபார் மண்டல் ( தேசிய வியாபாரிகள் சங்கம்) என்ற வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த 300 முதல் 400 வியாபாரிகள் கிழக்கு டில்லியில் உள்ள ரிலையன்ஸ், சுபிக்சா கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இவர்களின் எதிர்ப்பால் இரண்டு கடைகளும் மூடப்பட்டன.

மத்திய பிரதேஷத்தில் உள்ள ரிலையன்ஸ் கடைகளை இரண்டு வாரங்களுக்கள் இழுத்து மூடுமாறும் அல்லது பிரச்சனையை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்குமாறும் எச்சரித்து ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானிக்கு பாரதிய ஜனசக்தி கட்சியின் தலைவர் உமாபாரதி சென்ற் மாதம் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த கடிதம் எழுதிய மறுநாளே ராஷ்ட்டிரிய வியாபார் மண்டலைச் சேர்ந்த வியாபாரிகளால் ரிலையன்ஸ் ஃப்ரஸ், ஆர்.ி.ஜி என்டர் பிரைசசை சேர்ந்த ஸ்பென்ஷர் சூப்பர் மார்க்கெட் அடித்து நொறுக்கப்பட்டன.

கடந்த மாதம் உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதி, உத்தரபிரதேசத்தில் உள்ள ரிலையன்ஸ் ஃப்ரஷ் கடைகளை மூடும் படி உத்தரவிட்டார். சில்லறை வணிகத்தில் நவீன சூப்பர் மார்க்கெட்டுகளை அனுமதிப்பதால், சில்லரை வியாபாரிகள் எந்தளவு பாதிக்கப்படுவார்கள் என்பதை ஆய்வு செய்து முடிக்காமல் இருப்பதால், ரிலையன்ஸ் கடைகளை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக மாயாவதி தெரிவித்திருந்தார்.

இதே போல் கொல்கத்தாவில் திறக்க திட்டமிட்டிருந்த ரிலையன்ஸ் ஃப்ரஷ் கடையை, ஆளும் இடது முண்ணனியில் பங்கு பெற்றுள்ள பார்வர்ட் ப்ளாக் கட்சியின் எதிர்ப்பால், ரிலையன்ஸ் நிறுவனம் ஒத்திவைத்தது.

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், கேரளா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் உட்பட பல்வேறு மாநிலங்களில், சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு பெரிய வர்த்தக நிறுவனங்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், தங்களின் எதிப்பின் அடையாளமாக ரிலையன்ஸ் ஃப்ரஷ் கடைகளை தேர்ந்தெடுத்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்