மும்பை பங்குச் சந்தை 128 புள்ளிகள் சரிவு!

Webdunia

புதன், 13 ஜூன் 2007 (18:30 IST)
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் குறைந்ததால் பங்குகளின் விலைகள் சரிந்ததையடுத்து மும்பை பங்குச் சந்தை குறியீடு 128 புள்ளிகளும், தேச பங்குச் சந்தை குறியீடு 42 புள்ளிகளும் குறைந்தன!

இன்று காலை வணிகத்தில் 14,153 புள்ளிகளுக்கு உயர்ந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு நேரம் செல்லச் செல்ல தொடர்ந்து குறைந்து வர்த்தகத்தின் இறுதியில் 13,968.38 புள்ளிகளாக ஆனது.

தேச பங்குச் சந்தை 4,155.20 புள்ளிகளில் துவங்கி பிறகு 4,161.80 புள்ளிகளாக அதிகரித்து வணிகம் சரியத் துவங்கியதும் தொடர்ந்து சரிந்து இறுதியில் 4,113.05 புள்ளிகளுக்கு குறைந்தது.

ஒவ்வொரு முறையும் பங்குகளின் விலை லேசாக உயரும் போதெல்லாம் பங்குகளின் விற்பனையும் அதிகரித்ததால் இந்தச் சரிவு ஏற்பட்டது என்று கூறிய பங்குச் சந்தை வட்டாரங்கள், ஆனால் டி.எல்.எஃப். நிறுவனத்தின் துவக்க பொது வெளியீடு நிர்ணய விலையை விட 1.63 மடங்கு கூடுதலாக பெற்றதெனவும் கூறியுள்ளன.

இன்றைய பங்குகளை ரூ.335 கோடி அளவிற்கு அந்நிய நிறுவன முதலீட்டாளர்களும், 80.86 கோடி அளவிற்கு உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களும் வாங்கியுள்ளனர். இதன் காரணமாக நாளைய பங்கு வர்த்தகத்தில் நிலைமை மாறலாம். (யு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்