ஆப்பிரிக்காவில் விரிவு படுத்த பி.எஸ்.என்.எல். திட்டம்
புதன், 24 ஜூன் 2009 (16:15 IST)
அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். ஆப்பிரிக்காவிலும் தங்கள் சேவைகளை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான எம்.டி.என்., உலக அளவில் புகழ் பெற்ற முன்னணி நிறுவனங்களான பார்தி ஏர் டெல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதையடுத்து பி.எஸ்.என்.எல். நிறுவனமும் அங்கு தனது சேவைகளை அளிக்க முன்வந்துள்ளது.
அங்கு புதிய உரிமங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களை வாங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் குல்தீப் கோயல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"ஆப்பிரிக்காவில் கால்பதிக்க பல்வேறு வாய்ப்புகளையும் பரிசீலித்து வருகிறோம், புதிய உரிமங்கள் அல்லது ஏற்கனவே உரிமம் வைத்திருக்கும் நிறுவனங்களுடன் கூட்டுறவு என்று பல வாய்ப்புகளையும் பரிசீலித்து வருகிறோம்" என்றார்.
அயல் நாட்டு முதலீட்டுத் திட்டங்களுக்கு அரசு அனுமதி கிடைத்துள்ளது என்று கூறிய கோயல், பி.எஸ்.என்.எல். பெரிய அளவில் முதலீடு செய்ய தயாராக உள்ளது என்றார்.