காந்தி நகர்: கூகுள் எர்த் புவியியல் தகவல் ஒழுங்கமைப்பு போலவே இந்திய விண்வெளி ஆய்வு மையமான ஐ.எஸ்.ஆர்.ஓ. புவன் என்ற ஆன் லைன் பூகோள வரைபடம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.
ஐ.எஸ்.ஆர்.ஓ. தலைவர் மாதவன் நாயர் இதனை நேற்று அறிவித்தார். அதாவது கூகுள் எர்த்திற்கு இணையானது ஆனால் மேலும் சுருக்கமானது. துல்லியமானது என்று அவர், காந்தி நகரில் நடைபெற்ற 28ஆவது கூட்டிணைவு வரைபடமாக்கம் மற்றும் விண்வெளி தொழில் நுட்ப கருத்தரங்கில் பங்கு பெற்றபோது தெரிவித்தார்.
இந்த ஆன்லைன் பூகோள வரைபடம் நமது இயற்கை வள ஆதாரங்கள் பற்றிய சமீபத்திய தகவல்களை அளிக்கும், புதிய படங்களுடன் துல்லியமான வரைபடங்களை வழங்கவுள்ளோம் என்று மாதவன் நாயர் தெரிவித்தார்.
புவன் என்று அழைக்கப்படும் இந்த சேவை இன்னும் 6 மாதங்களில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவைக்கு தேவையான மென்பொருள், உள்கட்டமைப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தகவல்கள் ஆன் லைனில் இருந்தாலும், சில துல்லியமான தகவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனாளர்களுக்கே அளிக்கப்படும் என்று கூறியுள்ளார் மாதவன் நாயர்.
இந்த புவன் என்ற பூகோள ஆன்லைன் வரைபடம் மூலம் ஒட்டு மொத்த பூமியின் மேற்பகுதிகள் மட்டுமல்லாது, கீழேயுள்ள விலைமதிக்கமுடியாத கனிமவளங்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.