எச்டிஎஃப்சி வங்கியின் நடமாடும் தானியங்கி பணப்பட்டுவாடா மையத்தை (ஏடிஎம்) கோவையில் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளது.
கிராமப் பகுதிகளில் பணம் செலுத்துவது மற்றும் பணம் பெறுவதற்கான வசதிகளை உள்ளடக்கியதாக இந்த நடமாடும் தானியங்கி பணப்பட்டுவாடா மையம் இருக்கும். இதனால் கிராம மக்கள் பணங்களை செலுத்துவது மற்றும் தேவையான பணத்தை எடுத்துக் கொள்வது எளிதாக இருக்கும்.
மாதத்தின் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட பகுதிக்கு இந்த நடமாடும் தானியங்கி பணப்பட்டுவாடா மையங்கள் கொண்டு செல்லப்படும். இதன் மூலம் கிராமமக்கள் தாங்கள் வாழும் பகுதியிலேயே வங்கிச் சேவையைப் பெற முடியும் என்று வங்கியின் சிறு வணிகக் கடன் பிரிவின் துணைத் தலைவர் மனோகர் ராஜ் தெரிவித்தார்.
தற்போது உள்ள தானியங்கி பணப்பட்டுவாடா மையங்களில் பணத்தை எடுக்கும் வசதி மட்டுமே உள்ளது. இந்த நடமாடும் தானியங்கி பணப்பட்டுவாடா மையத்தில் பணத்தை எடுப்பதோடு மட்டுமின்றி செலுத்தும் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வசதி பின்னர் படிப்படியாக பிற கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.