கூடுதல் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டிற்கு தொகை வசூலிக்கப்படும்!
செவ்வாய், 15 ஜூலை 2008 (12:55 IST)
புது டெல்லி: பார்தி ஏர்டெல், வோடஃபோன் எஸ்ஸார், ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அளவைக் காட்டிலும் அதிகமாக பயன்படுத்தி வருவதால் இந்த நிறுவனங்களிடமிருந்து கூடுதல் தொகையை தொலைத் தொடர்புத் துறை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2-ஜி செல்லுலார் சேவையில் உரிமம் வழங்கப்பட்டுள்ள 6.2 மெகாஹெர்ட்ஸை விடவும் இந்த நிறுவனங்கள் அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் ஸ்பெக்ட்ரம் அளவை பயன்படுத்தி வருகின்றன.
இது குறித்து தொலைத் தொடர்புத் துறை, செல்பேசி தொழிற்துறையைச் சார்ந்த பிரதிநிதிகளுடன் நேற்று கலந்தாலோசனை செய்தது. பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 12 மெகாஹெர்ட்ஸ் வரையிலும் ஸ்பெக்ட்ரம் அளவு பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது.
இதனால் இந்த செல்பேசி சேவை நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ரூ.1,600 கோடி தொலைத் தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஜி.எஸ்.எம். சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்ட 6.2 மெகாஹெர்ட்சைக் காட்டிலும் அதிகமாக பயன்படுத்த அனுமதித்தது ஏன் என்று தலைமை கண்காணிப்ப்பு ஆணையம் தொலைத் தொடர்புத் துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது.