தகவல் தொழில் நுட்பத்துக்கு அதிகம் செலவிடும் நாடு இந்தியா!
புதன், 13 பிப்ரவரி 2008 (19:22 IST)
பிரிக்ஸ் நாடுகள் என்று அழைக்கப்படும் பிரேசில், இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தகவல் தொழில் நுட்பத்திற்கு ஒதுக்கும் தொகை மிக வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தகவல் தொழில் நுட்பத்துக்கு இந்திய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செலவிடும் தொகையின் வளர்ச்சி பிரிக்ஸ் நாடுகளிலேயே மிக அதிகமாக 24 விழுக்காடாக உள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யா 22.9 விழுக்காடும், சீனா 20.4 விழுக்காடும், பிரேசில் சிறு மன்றும் நடுத்தர நிறுவனங்கள் 19.4 விழுக்காடும், தகவல் தொழில் நுட்பத்துக்கு செலவு செய்வதாகவும் மைக்ரோ சாஃப்ட்- ஏ.எம்.ஐ. பங்குதாரர்கள் நடத்திய இந்திய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் தகவல் தொழில் நுட்பத்தை நடைமுறைப் படுத்துதல் தொடர்பான ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் அழுத்தம் மற்றும் இணக்கமுமே தொழில் நுட்பநிறுவனங்களை வாங்கத் தூண்டும் முக்கிய காரணிகளாக விளங்குவதாகவும் அந்த ஆய்வு தெரிவித்து உள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 41 விழுக்காட்டினர் தகவல் தொழில் நுட்பம் தங்கள் நிறுவனங்களின் தயாரிப்புகளை தரம் உயர்த்த உதவியதாகவும், 39 விழுக்காட்டினர் முக்கிய மற்றும் பெரிய வாடிக்கையாளர்கள், பன்னாட்டு வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து உறவை மேம்படுத்திக் கொள்ள வேறு வழியின்றி இறுதியாக தகவல் தொழில் நுட்பத்தை நடைமுறைப் படுத்தியதாகவும் தெரிவித்து உள்ளனர்.
கணினி பயன்படுத்தும் இந்த வகை நிறுவனங்களில் 60 விழுக்காடு நிறுவனங்கள் 20 விழுக்காடு வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 39 லட்சத்த 80 ஆயிரம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 41 விழுக்காடு நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்திலும், 17 விழுக்காடு நிறுவனங்கள் உற்பத்தி துறையிலும் ஈடுபட்டுள்ளன.
இந்த இரண்டு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கையில் மொத்தம் 58 விழுக்காடு உள்ளன. இந்த வகையான நிறுவனங்களை மேம்படுத்த ஒரு கொள்கையும், நெறிப்படுத்த அமைப்பும் உருவாக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது. தகவல் தொழில் நுட்ப புரட்சியை அடுத்து உள் நாட்டிலும், உலக அளவிலும் உருவாகியுள்ள போட்டியை எதிர்க்கொள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும், நிதி இடையீட்டாளர்களும் இந்த நிறுவனங்களுக்கு உதவ வேண்டும்.