உடல்நலனுக்கு கேடுவிளைவிக்கும் மின்னணு குப்பைகள்!
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (19:58 IST)
தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி பெங்களூரூ நகரில் மின்னணு குப்பைகளை அதிகரித்துள்ளது. இந்த குப்பைகள் சரியான முறையில் அகற்றப்படாத நிலையில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து பெங்களூரூ நகரில் பன்னாட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் என 2000 -க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் ஏராளமான கணினிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில் புதிய வசதிகளுடன் வரும் கணினிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரும்போது ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கணினி, அதோடு சார்ந்த சி.பி.யு., பெரிபேரல்ஸ், சர்வர்கள், பிரிண்டர்கள், தொலைநகல் இயந்திரங்கள், நகல் இயந்திரங்கள், மதர் போர்டுகள், ஹாட் டிஸ்க், காம்பக்ட் டிஸ்க், டிஜிட்டல் வீடியோ டிஸ்க், டேப்கள், காட்ரிட்ஜஸ், தொலைபேசி உபகரணங்கள், லித்தியம் பேட்டரிகள் உள்ளிட்ட ஏராளமான பழைய பொருட்கள் அவ்வப்போது கழிக்கப்பட்டு குப்பைகளாக மாறுகின்றன.
இதுதவிர ஃப்ளோரசன்ட் மற்றும் காம்ஃப்க்ட் ஃப்ளோரசன்ட் விளக்குகள் உள்ளிட்ட பிற மின்னணு சாதனங்களும் மின்னணு குப்பைகளாக மாறி பெங்களூரூ நகரை மிரட்டி வந்த நிலையில், மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்ய இ-பாரிசாரா என்ற நிறுவனம் பெங்களூரூ புறநகர் பகுதியில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மின்னணு கழிவுகள் முறையாக மறுசுழற்சி செய்யப்படாவிட்டால் ஆபத்தை உருவாக்கும் என்று இந்த நிறுவனத்தின் இயக்குநர் பி.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். மேலும் மின்னணு குப்பைகளை முறையாக சேகரித்து மறுசுழற்சி செய்ய தேவையான உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த மறுசுழற்சி நிறுவனத்தில் ஆண்டுக்கு 350 டன்கள் னினணு குப்பைகள் மறுசுழற்சி செய்ய இயலும். ஆனால் ஆண்டு ஒன்றுக்கு 8,000 டன் மின்னணு குப்பைகள் பெங்களூரூ நகரில் உருவாக்கப் படுவதாகவும், இதனால் பெங்களூரூ மின்னணு கழிவுகள் உள்ள நகரங்களின் பட்டியலில் தற்போது இணைந்துள்ளது.
மின்னணு கழிவுகள் முறையாக மறுசுழற்சி செய்யப்படாவிட்டால் மனிதர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் என்று மின்னணு குப்பைகள் மறுசுழற்சித் துறை வல்லுநர் ஹென்னிங் ஸ்கைரபர் எச்சரித்துள்ளார். வீடுகளில் பயன்படுத்தப்படும் கணினிகள், குளிர்சாதனப் பெட்டிகள், தொலைக் காட்சிப் பெட்டிகள், செல்பேசிகள் ஆகியவற்றில் 1,000 க்கும் மேற்பட்ட கெடுதியை விளைவிக்கும் பொருட்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கணினி மதர் போர்டுகளில் உள்ள பெரிலியம்,சிப் ரேஸிஸ்டர், செமி கண்டக்டர்களில் பயன்படுத்தப்படும் காடிமியம் ஆகியவை புற்றுநோயை உருவாக்கும் திறன் உள்ளவை. பிளாஃப்பி டிஸ்கில் உள்ள குரோமியம், கணினி திரைகள்,பேட்டரியில் உள்ள கந்தகம், ஆல்கலைன் பேட்டரியில் உள்ளபாதரசம், ஃப்ளோரசன்ட் விளக்குகள் ஆகியவை உடலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இதேப் பிரச்சனை வருவதற்கு முன்னர் மத்திய அரசு சம்மந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணைந்து தெளிவான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.