அடுத்த 5 ஆண்டுகளில் அயல் அலுவலக பணிகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு : நாஸ்காம்!
செவ்வாய், 29 ஜனவரி 2008 (18:55 IST)
இந்திய அயல் அலுவலக பணித்துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்றும், 2012 ஆம் ஆண்டில் இத்துறையில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பணியாற்றுவோர் எண்ணிக்கை ஒரு கோடியாக இருக்கும் என்றும் நாஸ்காம் தெரிவித்துள்ளது.
நாஸ்காம், சர்வதேச ஆலோசனை வழங்கும் நிறுவனமான எவரெஸ்ட் குழுமத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில், உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் இந்திய அயல் அலுவலக பணி நிறுவனங்கள் உள்ளதாகவும், இதேநிலை தொடரும் பட்சத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் இத்துறை ஐந்து மடங்கு வளர்ச்சியடையும் என்பது தெரியவந்ததாக, நாஸ்காம் தலைவர் சாம் மிட்டல் தெரிவித்துள்ளார்.
தற்போது இத்துறையின் வர்த்தகம் ரூ.44,000 கோடியாக உள்ளதாகவும், இது வரும் 2012-க்குள் ரூ.1.20 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசும், கல்வி நிறுவனங்களும் இந்திய அயல் அலுவலக பணித் துறைக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் உரிய ஒத்துழைப்பை வழங்கும் நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் இத்துறையின் வர்த்தகம் ஐந்நு மடங்கு அதிகரித்து ரூ.லட்சம் கோடியளவுக்கு உயரும் வாய்ப்புள்ளதாக சாம் மிட்டல் கூறியுள்ளார்.
வரும் 2012 -க்குள் இந்திய அயல் அலுவலக பணித்துறையிர் முதலீடுகளை அதிகரித்து, அதனை விரிவுப்படுத்துவது தொடர்பாக நாஸ்காம், எவரெஸ்ட் குழுமம் இந்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் இருந்து இத்துறையின் திறன்கள், இந்திய அயல் அலுவலக பணித் துறை, அதனை நடத்துபவர்களுக்கான வாய்ப்புகளும், வளர்ச்சிக்கான காரணிகள் தெரிய வந்ததாக அவர் கூறியுள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் இந்த ஆய்வு முடிவைப் போன்று இந்திய அயல் அலுவலக பணித்துறை ஐந்து மடங்கு வளர்ச்சியடையும் போது, நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் 2.5 விழுக்காட இத்துறையின் பங்களிப்பாக இருக்கும் என்றும், வரும் 2012 ஆம் ஆண்டில் இத்துறையின் மூலம் நேரடி வேலை வாய்ப்பு பெறுவோர் 20 லட்சமாகவும், மறைமுகமாக வேலை வாய்ப்பு பெறுவோர் 80 லட்சமாகவும் இருப்பார்கள் என்றும் சாம் மிட்டல் தெரிவித்துள்ளார்.
இத்துறையில் உலகின் 25 நாடுகளில் சுமார் 7 லட்சம் பேர் பணியாற்றி வருவதாகவும், இது அயல் அலுவலக பணித் துறையில் அயல் நாடுகளில் பணிபுரியும் பணியாளர்களில் 40 விழுக்காடு என்றும் குறிப்பிட்டுள்ளார். எதிர்கால வாய்ப்பு மிகப் பெரிய அளவுக்கு உள்ளதாகவும் சாம் மிட்டல் கூறியுள்ளார். இந்த ஆய்வு எதிர்கால வாய்ப்புகள் தொடர்பாக அறிந்து கொள்ள மட்டும் நடத்தப் படவில்லை என்றும், இதனை எட்டுவதற்கு தொடர்புடைய அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் கூறவே நடத்தப் பட்டதாகவும் சாம் மிட்டல் தெரிவித்துள்ளார்.