கோவாவில் அகண்ட அலைவரிசை!
வியாழன், 27 டிசம்பர் 2007 (11:30 IST)
கோவா அகண்ட அலைவரிசைத் திட்டத்தின் முதல் பிரிவை பிரதமர் மன்மோகன் சிங் இன்று தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மன்மோகன் சிங் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக கோவா வந்துள்ளார். கோவா மாநிலத்தின் தலைநகருடன் அம்மாநிலத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களையும், 11 வட்டங்களையும் மின்னணு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதுடன், வெளிப்படையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்கும் வகையில் இத்திட்டம் கோவா மாநிலத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை பிரதமர் இன்று நடைபெறும் விழாவில் தொடங்கிவைக்க உள்ளார். இத்திட்டம் ஐ.பி.தொலைத் தொடர்பு வசதி, இணையதளங்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம், இணையதளத்தின் மூலம் கல்வி, சுகாதாரம், பதிவு, வீடியோ கான்ஃபரன்சிங் வசதிகள் வழங்கப்பட உள்ளது.
அழைப்பு மையங்கள், அயல்,அறிவுசார் அயலக அலுவல்களை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கும், மின்னணு கல்வி - வகுப்பறைக் கல்வித் திட்டம், நோய் கண்டறிதல், மருத்துவ சிகிச்சைக்கான ஆலோசனைகள், சிகிச்சைகள்,தொலைக்காட்சி ஒளிபரப்பு, அகண்ட அலைவரிசை சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இது உதவும்.
நாளை நடைபெறும் கோவா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங் புகழ் பெற்ற இந்தி திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கும்,பிரபல விஞ்ஞானி அணில் கோக்டாகர் ஆகியோருக்கு முனைவர் பட்டத்தை வழங்குகிறார். பிரதமர் வருகையையொட்டி கோவாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.