இணைய தளங்களால் சீனாவில் இளம் வயது குற்றம் அதிகரிப்பு!
Webdunia
புதன், 5 டிசம்பர் 2007 (16:34 IST)
இணைய தளங்களை அதிகமாக பயன்படுத்தும் வசதியும், ஒரு குழந்தைக் கொள்கையும் சீனாவில் இளம் வயதினர் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலை தொடருவது நாட்டுக்கு ஆபத்தானது என்று சீன அரசை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
பெருகி வரும் இளம் குற்றவாளிகள் தொடர்பான கருத்தரங்கில் பேசிய காவல்துறை நிபுணர் ஒருவர், கடந்த 10 ஆண்டுகளில் இளம் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், சீன நிதிமன்றங்களில் விசாரணையில் உள்ள வழக்குகளில் மூன்றில் 2 பங்கு வழக்குகளில் இளைஞர்களுக்குத் தொடர்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
குற்றச் செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதால் குற்ற வகைகள் அதிகரித்துள்ளதாக மற்றொருவர் கூறினார். இதற்கு முக்கிய காரணமாக, சீன அரசின் ஒரு குழந்தை கொள்கையும்,பெருகி வரும் இணைய தள வசதிகளும் தான் என்று இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பெரும்பாலான நிபுணர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. இந்த நிலையால் சமூகத்திற்கு மிகப் பெரிய அளவில் ஆபத்து உருவாகியிருப்பதாக சீன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இளம் குற்றவாளிகள் குழுவாக இணைந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், எந்தவித நோக்கமுமின்றியும், கொஞ்சம் கூட யோசிக்காமலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக, சீன இளம் குற்றவாளிகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ள அதிகாரி கூறியுள்ளார்.
திருட்டு, கொலை முயற்சி, பாலியல் வன்முறை ஆகியவற்றுடன், புதிதாக ஏமாற்றுதல், இணையதளக் குற்றங்கள் என 22 வகையான புதுவிதமான குற்றங்களில் இளைஞர்கள் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது என்றும், இதற்கு காரணம் வேலைத் தேடி பெற்றோர்கள் நகர்புறங்களுக்கு சென்று குடியேறி வருவதால் குடும்பங்கள் சிதைந்து வருவது காரணம் என்று கூறினார்.
சீனாவைப் பொருத்தமட்டில் பெரும்பாலான குடும்பங்களில் ஒரே ஒரு குழந்தை என்ற நிலை தான் உள்ளது. இது குழந்தைகளிடையே ஒருவிதமான மன அழுத்தத்தை உருவாக்கி குற்றச் செயல்களில் அவர்களை ஈடுபட செய்கிறது என்று இளம் குற்றவாளிகள் தொடர்பான குற்றங்களை விசாரித்து வரும் சீன நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த 1998 -ல் 33,000 -மாக இருந்த இந்த வகை குற்றங்கள் தற்போது 80,000 வழக்குகளாக உயர்ந்துள்ளன.