இணையதள வேவு அமைப்புகளால் நாடுகளுக்கு பேராபத்து - வல்லுநர்கள் எச்சரிக்கை!
Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2007 (15:43 IST)
இணைய தளங்களை இரகசியமாக சில சக்திகள் வேவு பார்ப்பதன் மூலம் உருவாகும் பிரச்சனைகள் சர்வதேச அளவில் 2008 -ம் ஆண்டில் உலக நாடுகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதார எல்லைகளைத் தாண்டி பல்வேறு நாடுகளும், நிறுவனங்களும் தங்களின் வணிகத்தை விரிவுப்படுத்தி வரும் நிலையில் சில நாடுகள் மற்ற நாட்டு நிறுவனங்களின் கணினி அமைப்புக்களில் ஊடுருவி, குறுக்கு வழியில் அவைகளைச் சீர்குலைக்க முயன்று வருகின்றன.
இது போன்ற நிகழ்வுகள் தற்போதும் நடைப்பெற்றுக் கொண்டுதான் உள்ளன. இவர்கள், இணையதள வங்கி சேவைகள், வேகமாக வளர்ந்து வரும் சந்தை உள்ளிட்ட பிற துறைகளை குறிவைத்துள்ளனர். இணையதளத்தின் மூலம் வேவு பார்த்து அவற்றை முடக்குவதும், வளர்ச்சிக்கான காரணிகளை தெரிந்துக் கொண்டு அந்நிறுவனங்களின் வர்த்தகத்தை நாசப்படுத்துவதும் இவர்களின் பணியாக உள்ளது.
சர்வதேச அளவில் பெருகிவரும் இணையதளக் குற்றங்களைத் தடுப்பதுடன், அது போன்ற நடவடிக்கையிலிருந்து மீள்வது தொடர்பாக, நேட்டோ, அமெரிக்க புலனாய்வு அமைப்பு, சோசா, பல்வேறு பல்கலைக் கழகங்கள், அமைப்புகள், இது தொடர்பான துறை வல்லுநர்களிடம் இருந்து திரட்டிய தகவல்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட மெக் ஆஃப்பி குற்றவியல் ஆய்வில் 2008 -ல் இணையதளக் குற்றங்கள் பெரிய சவாலாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது.
இணையதளங்கள் மூலம்வேவு பார்த்தல், தாக்குதல் தொடுக்கும் வேலைகளில் சில அரசுகளும், அதன் அமைப்புகள் - குழுக்களும் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. நாடுகளின் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளான மின்சாரம், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம், நிதிச்சந்தைகள், அரசுகளின் இணையதளங்கள் ஆகியவை இவர்களின் இலக்குகள் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது 120 நாடுகள் இணையதளத்தை வேவுபார்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
இதுபோன்ற தாக்குதல் பெரும்பாலும் சீனாவில் இருந்துதான் வருகின்றன என்பதை,சீன அரசும் வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறது. இணையதள தாக்குதல் இயற்கையிலேயே நவீனமானதாக உள்ளது. இதற்கு பயன்படுத்தப்படும் மென்பொருள் இணையதளக் குற்றங்களைத் தடுப்பதற்காக அரசுகளால் அமைக்கப்பட்டுள்ள ரேடார் சாதனங்களின் பார்வையில் சிக்காது என்றும் சீனா தெரிவித்துள்ளது.
இக்குற்றங்கள் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், அரசியல், இராணுவம், பொருளாதாரத் துறைகள், தொழில் நுட்பத் துறைகளில் வேவு பார்க்கவும், நாச வேலைகளை அரங்கேற்றவும் தாராள நிதிஉதவியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட நிறுவனச் செயல்பாடுகள் சிறப்பாக இயங்கி வருவது தெரியவந்துள்ளது.
இணையதளக் குற்றங்கள் தற்போது சர்வதேச பிரச்சனையாக உள்ளது. தொழில் நிறுவனங்கள், தனிநபர்களை மட்டும் மிரட்டும் செயலாக இதனைக் கருதிவிட முடியாது என்றும் படிப்படியாக அதன் செயல்பாடுகள் அதிகரித்து நாடுகளின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் என்றும் மெக் ஆஃப்பி அவர்ட் லேப் நிறுவனத்தின் முதுநிலை துணைத்தலைவர் ஜெஃப் கிரீன் கூறியுள்ளார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிறுவனங்கள் மீது இணையதள வேவுபார்க்கும் அமைப்புகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஒரே தீர்வு தொழில்நுட்பம் ஒன்று தான் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச நாடுகள் இக்குற்றங்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இணையதளத்தில் உள்ள தனிநபர் தகவல்களுக்கும், இணையதள சேவைகளுக்கும் பலவகைகளில் மிரட்டல் வரும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
தற்போது காணப்படுவது போல மரபணு முறையில் மேம்படுத்தப்பட்ட இணையதள தாக்குதல் நிகழ்வுகள் இதற்கு முன்பு இருந்ததில்லை, இது போன்ற தாக்குதல் விளைவுகள் நுவார் தாக்குதலைப் போன்றதாக இருக்கும் என்று கூறினார்.இதுபோன்று பல நிகழ்வுகள் 2008 -ல் நடைபெறும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இணையதளத்தின் அடிப்படையிலான தொலைத்தொடர்பு (Voice over IP- Internet Protocol) மென்பொருள் மீது தான் தற்போது குற்றவாளிகளின் பார்வை திரும்பியுள்ளது என்றும் அதில் பல்வேறு வசதிகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. அதாவது தொலைத் தொடர்பு இணைப்புகளைப் பயன்படுத்தி நீண்டதுரத் தாக்குதல் நடத்த வசதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.