சிறு - நடுத்தர நிறுவனங்கள் மீது பார்வையைத் திருப்பும் பன்னாட்டு நிறுவனங்கள்!
புதன், 28 நவம்பர் 2007 (18:29 IST)
டாலர் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில் தற்போது சிறு - நடுத்தர நிறுவனங்களின் மீது பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை திரும்பியுள்ளது.
இதுவரை மிகப் பெரிய நிறுவனங்களைப் பின்பற்றி வந்தன சிரிய - நடுத்தர நிறுவனங்கள். இப்போது உருவாகியுள்ள பொருளாதார மாற்றத்தினால் சிரிய, நடுத்தர நிறுவனங்களை பின்பற்ற வேண்டிய நிலைக்கு பெரிய நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
சிறு, நடுத்தர நிறுவனங்களில் புதிய தொழில் நுட்பத்தை வாங்கவோ அல்லது அது தொடர்பான முடிவுகளை மேற்கொள்வதோ சிரமமானது அல்ல. ஏனென்றால் அங்கு அதிகார அடுக்குகள் குறைவாகவே இருக்கும். பெரிய நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இருந்து வரும் தங்களின் நிர்வாக நடைமுறைகளை உடனடியாக மாற்ற இயலாது.
இ.ஆர்.பி. என்பது நிறுவனங்களின் நடைமுறைகளை ஒழுங்குப்படுத்தும் முறை. இது நிறுவனங்களின் மூலப் பொருட்கள், பணியாளர் விவரங்கள், உள்ளிட்ட தகவல்களுடன் வாடிக்கையாளர்கள், விநியோகிப்பவர்கள் தொடர்பான தகவல்கள் முதல் நிறுவனத்தின் அனைத்து பணிகளையும் உள்ளடக்கியதாகும்.
மாறிவரும் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதிய வணிக உத்திகளை பயன்படுத்தி பெருகி வரும் சர்வதேச வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. இதனைப் பயன்படுத்தி புதிய சந்தைகளையும், வலிமையான வாடிக்கையாளர் உறவையும் உருவாக்கிக் கொள்ள முடியும்.
பன்னாட்டு நிறுவனங்களான வால் மார்ட், டெஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களுடன் நம் நாட்டு நிறுவனங்களான ரிலையன்ஸ், பாரதி அக்ரோ பிசினஸ் போன்ற நிறுவனங்களும் தங்களின் சங்கிலித் தொடர் வணிகத்தை வலுப்படுத்த இந்த நிறுவனங்களையே எதிர்நோக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந் நிறுவனங்களின் வெற்றி, அந்த நிறுவனங்கள் எவ்வாறு புதிய நடைமுறைகளுடன் சந்தையில் அடியெடுத்து வைக்கின்றன என்பதை பொறுத்தது.அனைத்து பாரம்பரிய தொழில்களும் புதிய நடவடிக்கையில் இறங்கினால் தகவல் தொழில் நுட்பத்துறையே காணாமல் போய்விடும் சூழல் உருவாகலாம்.
சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தும் இ.ஆர்.பி.களைப் பயன்படுத்தாமல், தங்களுக்கென்று தனியாக இலக்குகளை வரையறுத்துக் கொண்டு களம் இறங்கும் நிலையில் குவிந்து கிடக்கும் சந்தை வாய்ப்புகளை பயன்படுத்தி மேன்மேலும் வளர்ச்சியடைய முடியும் என்று சந்தை நோக்கர்கள் கூறுகின்றனர்.