இணைய தளத்தில் பரவிக்கிடக்கும் தீவிரவாதம்!
Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2007 (12:00 IST)
இன்றைய நவீன உலகத்தில் தீவிரவாதிகள் தங்களின் கருத்துக்களைப் பரப்புவதற்கு இணைய தளம் மிக எளிதான, பாதுகாப்பான ஊடகமாகப் பயன்பட்டுவரும் அதிர்ச்சியான தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நடத்திவரும் தாக்குதல்கள் அல் காய்டா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளன.
எனவே ஈராக்கின் விடுதலைக்காக புனிதப் போர் நடத்துகிறோம் என்ற பெயரில் கொடூரமான தாக்குதல்களை அந்த இயக்கத்தினர் நடத்தி வருகின்றனர்.
இந்தத் தாக்குதல்களுக்கு தேவைப்படும் நிதியைத் திரட்டுவதற்காக உலகளாவிய முஸ்லீம் மக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் வசிக்கும் பணக்கார முஸ்லீம்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் தீவிரவாத இயக்கங்கள் இறங்கியுள்ளன.
அதற்கான களமாக 100க்கும் மேற்பட்ட ஆங்கில இணைய தளங்கள் பயன்படுகின்றன. கார் குண்டு வெடிப்புகள், தீவிரவாதத் தாக்குதல்கள் ஆகியவற்றின் ஒளிப்படங்கள் இந்த இணைய தளங்களில் பரவிக்கிடக்கின்றன.
மேற்கத்திய இணைய தளங்களான 'யூ டியூப்' போன்றவற்றில் அல் காய்டாவின் படங்கள் ஏராளமாக உள்ளன. இஸ்லாமிய மதம் தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறது என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க இந்தப் படங்கள் பயன்படுகின்றன.
அல் காய்டாவின் படங்களை தொடர்ந்து பார்த்துவரும் 21 வயது ஜெர்மன் இளைஞரான அபு சலேக், '' ஆங்கிலப் படங்களப் படங்களைப்போல விருவிருப்பாக உள்ளன'' என்கிறார்.
இவர், புதிய தீவிரவாத வெளியீடுகளைப் பார்ப்பதற்காக வாரத்திற்கு இரண்டு முறை பெர்லினில் உள்ள இணையதள மையத்திற்குச் செல்கிறார்.
இது தவிர தீவிரவாதத் தலைவர்களின் பேட்டிகள், தீவிரவாதக் கருத்துக்கள் அடங்கிய படைப்புகள் ஆகியவையும் இந்த இணைய தளங்களில் ஏராளமாக உள்ளன.
இவை, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் முஸ்லீம் இளைஞர்களிடம் எளிதாகச் சென்றடைகின்றன. விருப்பப்படும் இளைஞர்கள் தீவிரவாதப் பயிற்சி பெறுவதற்கும் இணைய தளப் படைப்புகள் உதவுகின்றன.
இத்தகவல்கள் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் விவரமாக வெளியிடப்பட்டு உள்ளது.