குரல்-கட்டளை தொழில்நுட்பம் (வாய்ஸ் கமாண்ட் டெக்னாலஜி) இன்னும் முழுமையான உயரத்தை அடையாவிட்டாலும் மெல்ல முன்னேறி வருகிறது. இத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆண்டு அமெரிக்க நிறுவனங்கள் 32 மில்லியன் மக்களுக்கு வாய்ஸ் சிஸ்டம்ஸ் எனப்படும் குரல் கட்டளை சாதனங்களை அளிக்க உள்ளனர். கடந்த ஆண்டைவிட இது 60 சதவீதம் அதிகமாகும் என்று கெஸ்லி குரூப் என்னும் சந்தை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வணிக ரீதியாகவும் இந்தத் தொழில்நுட்பம் உலகெங்கும் உயர்ந்த இடத்தை எட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை. ஏற்கெனவே அமெரிக்காவில் வாடிக்கையாளர்கள், தொலைபேசி எண்களைத் தேட மற்றும் விமானங்களின் வருகை புறப்பாடு நேரத்தை அறிந்து கொள்ள இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.
மின் விளக்குகளைக் கட்டுப்படுத்தவும், வெனிஷியன் பிளைண்ட்களை மூட திறக்கவும், டிவி பெட்டிகளைக் கட்டுப்படுத்தவும் இத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எக்ஸ் பாக்ஸ் என்னும் வீடியோ கேம் தயாரிப்பாளர்களான மைக்ரோசாப்ட், வருங்காலத்தில் குரல்-கட்டளை மென்பொருளைப் பயன்படுத்தி புதிய கேம்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு இருப்பது புதிய தகவல்.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண் பார்வையற்றவர்கள் ஏடிஎம்-களைப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமெரிக்க கண் பார்வையற்றவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. இது நனவானால் உண்மையிலேயே அவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.