ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்துவதால் ரூ.6,200 கோடி லாபம் அதிகரிக்கும்

வெள்ளி, 8 நவம்பர் 2013 (16:25 IST)
கூகுள் கிளாஸ் போன்ற ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்துவதால் பல துறைகளிலும் வேலைத் திறன் அதிகரிக்கும். இதன்மூலம் வருங்காலத்தில் பல துறைகளில் ரூ.6,200 கோடி அளவிற்கு லாபம் அதிகரிக்கும் என்று கார்ட்னர் அமைப்பின் ஆய்வு இயக்குனர் ஏஞ்சலா மெக்லன்டர் கூறியுள்ளார்.
FILE

ஸ்மார்ட் கண்ணாடி குறித்து அவர் கூறியதாவது:-

கூகுள் கிளாஸ் போன்ற ஸ்மார்ட் கண்ணாடியைப் பயன்படுத்துவதால் வேலைத் திறன் அதிகரிக்கும் என்று எங்களது ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. மருத்துவம், களப்பணி, வியாபாரம் மற்றும் உற்பத்தித் துறைகளில் இந்த வகை கண்ணாடியின் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனால் உற்பத்தி துறையில் இயந்திரங்களை கையாள்வது எளிதாகிறது. மருத்துவத்துறையில் இந்தக் கண்ணாடியால், சிக்கலான ஆபரேஷன்கள் கூட டாக்டர்களுக்கு படிப்படியாக காட்டப்படுவதால் சிகிச்சை முறையாகவும் தவறில்லாமலும் செய்ய முடியும். கட்டிடப்பணி போன்ற பணிகளில் முன்கூட்டியே கம்யூட்டர் மூலம் வடிவமைப்புகளை பதிவு செய்து கொண்டு பணிகளில் ஈடுபடுவதால் அவற்றை எளிதாக செய்யமுடிகிறது.

ஸ்மார்ட் கண்ணாடிகள் இன்னும் தொழில்நுட்பத்தின் ஆரம்ப நிலையில் இருக்கின்றது. இதில் தொழில் நுட்பங்கள் கூடக்கூட கண்ணாடியின் பயன்கள் அதிகரிக்கும். இப்போது ஒரு சதவீத அமெரிக்க கம்பெனிகளில் மட்டுமே ஸ்மார்ட் கண்ணாடிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. விலைகுறைப்பு மற்றும் புதிய தொழில்நுட்ப வசதிகளால் எதிர்காலத்தில் விற்பனையும் உபயோகமும் அதிகரிக்கும். இவ்வாறு ஏஞ்சலா மெக்லன்டர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்