கேஸ் விலையை ரூ.10, டீசல் விலை மாதம் ஒரு ரூபாய் உயர்த்த மத்திய அரசு முடிவு

வியாழன், 7 நவம்பர் 2013 (14:14 IST)
FILE
சமையல் கேஸ் விலையை ரூ.10 உயர்த்தவும், டீசல் விலையை மாதம் தோறும் ஒரு ரூபாய் உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்து வரும் மானியத்தை முழுமையாக நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மாதம் தோறும் டீசல் விலையில் 50 காசு உயர்த்தப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு அதிகரித்துள்ளது. டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.11 இழப்பு ஏற்படுகிறது. அது போல சமையல் கேஸ் விற்பனையில் சிலிண்டருக்கு ரூ.555 வரை இழப்பு ஏற்படுகிறது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல், சமையல் கேஸ் விலையை உடனே அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

தற்போது மாதம் தோறும் டீசல் விலை 50 காசு உயர்த்தப்படுவதை இனி ஒரு ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. சமையல் கேஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.10 வரை அதிகரிக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதுபற்றி மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், "பெட்ரோல், டீசல் விலை உயர்வு மிக அதிக அளவில் இருக்காது. சிறிய அளவிலேயே உயர்த்தப்படும்" என்றார்.

பெட்ரோலியப் பொருட்களுக்கு மானியம் கொடுப்பதால் ஆண்டுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு இழக்கிறது. இந்த தொகை முழுவதும் படிப்படியாக மக்கள் தலையில் சுமத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்