வெங்காயத்தை தொடர்ந்து உருளை கிழங்கு விலையும் உயர்வு

புதன், 6 நவம்பர் 2013 (18:56 IST)
FILE
வெங்காயத்தை தொடர்ந்து காய்கறிகளின் அரசன் என்று அழைக்கப்படும் உருளைக்கிழங்கின் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் வாடிக்கையாளர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

அத்தியாவசிய பொருளான வெங்காயத்தின் விலை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த வாரத்தில் 100 ரூபாயை எட்டியது. இதனைத் தொடர்ந்து வெங்காய பதுக்கலை தடுக்குமாறு மாநில அரசுகளை வலியுறுத்திய மத்திய அரசு வெங்காயத்தின் இறக்குமதியை அதிகபடுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெங்காயத்தின் விலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அரசியல் கட்சிகள் கதிகலங்கி போய் உள்ளன. இந்நிலையில் வெங்காயத்தை தொடர்ந்து அன்றாட பயன்பாட்டிற்கு தேவைப்படும் உருளைக்கிழங்கின் விலையும் உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விலை அதிகரிப்பை காரணம் காட்டி உருளை கிழங்கை அண்டை மாநிலங்களுக்கு அனுப்புவதை மேற்குவங்க அரசு முற்றிலும் நிறுத்தி உள்ளதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேற்கு வங்கத்தில் இருந்து வரத்து குறைந்து உள்ளதால் ஜார்கண்ட், பீகார், ஒடிசா உள்ளிட்ட மாவட்டங்களில் உருளை கிழங்குக்கு தட்டுபாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

ஏற்கனவே வெங்காயத்தின் விலை கண்ணீரை வர வைத்த நிலையில் தற்போது உருளை கிழங்கின் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் விழிபிதுங்கி உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்