பண்டிகை காலத்தில் கடன் வட்டி குறைந்துள்ளதால் கார்கள் விற்பனை அதிகரிக்கும்

ஞாயிறு, 13 அக்டோபர் 2013 (10:59 IST)
FILE
கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் பண்டிகை காலத்தில் கார்கள் விற்பனை சிறப்பான அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக நவராத்திரி விழாவின் முதல் ஆறு நாட்களில் கார்களுக்காக அதிக அளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கார் விற்பனை வளர்ச்சியில் கடனுக்கான வட்டி விகிதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால், அண்மைக் காலம் வரை மொத்த கார் விற்பனையில் 72 சதவீதம் கடன் வசதி மூலமாகவே நடைபெற்று வந்தது. இது இப்போது 65 சதவீதமாக குறைந்துள்ளது. கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களால் கடந்த சில மாதங்களில் கார் விற்பனை தொடர் சரிவை சந்தித்தது.

மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனமாக மேலும் ரூ.4,000 - ரூ.5,000 கோடி வழங்க ஆலோசித்து வருகிறது. இது பொதுமக்கள், கார்கள் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் வாங்கும் வகையில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்க பொதுத் துறை வங்கிகளுக்கு வசதியாக இருக்கும்.

பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் ஐ.டீ.பீ.ஐ. வங்கி ஆகியவை வாகன கடனில் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கியும் வாகன கடனிற்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. அதேசமயம், வீட்டுக் கடனிற்கான வட்டி விகிதத்தை இவ்வங்கி குறைக்கவில்லை. தனியார் துறையைச் சேர்ந்த எச்.டீ.எஃப்.சி. வங்கி, கோட்டக் பிரைம் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகியவையும் வாகன கடனிற்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தனியார் வங்கிகள் 11 முதல் 13 சதவீத வட்டி விகிதத்தில் வாகன கடன் வழங்கி வருகின்றன. பொதுத் துறை வங்கிகள் 10.25 முதல் 12.5 சதவீத வட்டியில் வாகன கடன்களை வழங்குகின்றன. இனிவரும் நாட்களில் 0.20 முதல் 0.30 சதவீதம் வரை வாகன கடனிற்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்க வாய்ப்புள்ளது என தனியார் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடனிற்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கும் பட்சத்தில் விற்பனை அதிகரிப்பதுடன், விசாரணைக்காக ஷோரூமுக்கு வாடிக்கையாளர்கள் வருவது அதிகரிக்கும் என கார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடனிற்கான வட்டி விகிதத்தை குறைத்தால், பண்டிகை காலத்தில் கார் வாங்கும் ஆர்வம் மீண்டும் அதிகரிக்கும் என ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் பி.பாலேந்திரன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்