ஏற்றுமதியாளர்கள் புன்னகைக்கும் 2010

வியாழன், 16 டிசம்பர் 2010 (14:24 IST)
அமெரிக்காவில் நிகழ்ந்த வீட்டுக் கடன் சிக்கலால் உருவான பொருளாதார பின்னடைவு உலகப் பொருளாதாரத்தை மந்தப்படுத்தியதன் விளைவாக இரண்டு ஆண்டுகளாக திணறிவந்த இந்தியாவின் ஏற்றுமதியாளர்களுக்கு 2010ஆம் ஆண்டு மீண்டும் புத்துணர்வு பிறந்துள்ளது.

2008ஆம் ஆண்டில் பரவலாக உலகப் பொருளாதாரத்தை உலுக்கிய பின்னடைவு, 2009ஆம் ஆண்டின் இறுதிவரை இறுக்கமாகவே இருந்தது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதி பெருமளவிற்கு பாதிக்கப்பட்டது. குஜராத்தின் வைரம் முதல் தமிழ்நாட்டின் ஜவுளி, ஆயத்த ஆடைகள் வரை ஏற்றுமதி சுருங்கியது.

ஆனால் 2010ஆம் ஆண்டில் மீண்டும் புத்துணர்வு பிறந்தது. இந்த ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் அதற்கு முந்தைய மாதத்தை விட ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொழில் வர்த்தக அமைச்சகத்தின் செயலர் ராகுல் குல்லர், “இந்தியாவிலிருந்து அதிகமாக ஏற்றுமதியாகும் எந்த ஒரு பொருளை எடுத்துக்கொண்டாலும், இந்த ஆண்டில் அவைகளின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது. ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான இந்த நிதியாண்டின் 8 மாதங்களிலும், இதற்கு முந்தைய ஆண்டுகளை விட அதிகமாகவே ஏற்றுமதி ஆகியுள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்த நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி இலக்காக 200 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் = 100 கோடி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை மிகச் சுலபமாக எட்டுவிட முடியும் என்ற நிலை உள்ளது. 215 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 179 பில்லியன் டாலர்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்