கள்ள பணப் புழகத்தைத் தடுக்க ஞெகிழியில் ரூபாய்? மைய வங்கி ஆளுநர் தகவல்
புதன், 15 டிசம்பர் 2010 (12:53 IST)
நாட்டில் கள்ள பணப் புழக்கத்தை தடுக்கவும், ரூபாயின் பயன்பாட்டுக் காலத்தை நீட்டிக்கவும் ஞெகிழியில் ரூபாயை அச்சடித்து வெளியிடுவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக இந்திய மைய வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநர் சுப்பா ராவ் கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாடிய சுப்பா ராவ், “இந்தியப் பொருளாதாரத்தில் கள்ள பணப் புழக்கத்தை தடுக்கவும், ரூபாயின் பயன்பாட்டுக் காலத்தை நீட்டிக்கும் பொருட்டும் ஞெகிழியில் (பிளாஸ்டிக்) ரூபாயை அச்சடித்து வெளியிடலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது” என்று கூறியுள்ளார்.
ஆஸ்ட்ரேலியா, நியூ ஸீலாந்து ஆகிய நாடுகளில் ஞெகிழில்தான் நாணயத்தை அச்சடித்து பயன்பாட்டிற்கு விடுகின்றனர். அதனை கருத்தில் கொண்டு நமது நாட்டிலும் பின்பற்றலாம் என்று கூறியுள்ள சுப்பா ராவ், கள்ள பணப் புழக்கம் நமது நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் பாதித்து வருகிறது என்று கூறியுள்ளார்.
ஞெகிழியில் நாணயத்தை கொண்டு வருவது குறித்து நாட்டின் வங்கிகளுடன் பேசு வருவதாகவும் கூறியுள்ளார்.