பிரான்சிடமிருந்து 2 அணு உலைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது
திங்கள், 6 டிசம்பர் 2010 (13:38 IST)
பிரான்ஸ் நாட்டின் ஆரேவா எஸ்.ஏ. நிறுவனத்தின் தயாரிப்பான 1,650 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகளை மராட்டிய மாநிலம் ஜாய்தாபூரில் நிறுவதற்கான ஒப்பந்தத்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பிரான்ஸ் அதிபர் நிக்கலாஸ் சர்கோஜி ஆகியோர் முன்னிலையில் இந்தியாவின் பொதுத் துறை நிறுவனமான இந்திய அணு சக்திக் கழகமும், ஐரோப்பிய அணு உலை தயாரிப்பாளரான ஆரேவா எஸ்.ஏ. நிறுவனமும் கையெழுத்திட்டன.
ஆரேவா நிறுவனத்திடமிருந்து மொத்தம் 6 அணு உலைகளை வாங்கி நிறுவ இந்தியா திட்டமிட்டுள்ளது. இதில் முதல் 2 அணு உலைகளுக்கான ஒப்பந்தமே இன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த 2 அணு உலைகளின் மதிப்பு 9.3 பில்லியன் டாலர்களாகும் (ஒரு பில்லியன் = 100 கோடி).
இந்தியாவின் எதிர்கால எரிசக்தித் தேவையை கருத்தில்கொண்டு அமெரிக்கா உள்ளிட்ட அயல் நாடுகளில் இருந்து 20 அணு உலைகளை வாங்கி நிறுவ மன்மோகன் அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 10 அணு உலைகளுக்கான ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.
2 அணு உலைகளுக்கான ஒப்பந்தங்களில் ஆரேவா நிறுவனம் கையெழுத்திட்டாலும், இந்தியா நிறைவேற்றியுள்ள அணு விபத்து இழப்பீடு சட்டத்தை அந்நிறுவனம் கவலையுடன் பார்ப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால், பன்னாட்டு விதிமுறைகளுக்கு இணங்கவே இந்தியாவின் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று இந்திய அரசு தரப்பு அவர்களுக்கு விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அணு உலைகள் மட்டுமின்றி, இந்தியாவிற்கு ஏற்கனவே விற்ற மிராஜ் 2000 போர் விமானங்களில் 51ஐ மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தையும் பிரான்ஸ் நிறுவனம் ஒன்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
அதேபோல், இந்தியா 11 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்க திட்டமிட்டுள்ள 126 போர் விமானங்கள், 4 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்க திட்டமிட்டுள்ள 200 ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றிலும் பிரான்ஸ் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 2012ஆம் ஆண்டிற்குள் 12 பில்லியன் யூரோக்களாக உயரும் என்று இந்த வர்த்தக அமைச்சகத்தின் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.