உணவு பொருட்கள் பணவீக்கம் அதிகரிப்பு

வியாழன், 8 ஏப்ரல் 2010 (13:46 IST)
பால், பழங்கள், பருப்பு போன்றவற்றின் விலை உயர்ந்ததால், உணவு பொருட்கள் பணவீக்கம் மார்ச் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 17.70 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 16.35 விழுக்காடாக இருந்தது.

உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் அதிகரிப்பது, உற்பத்தி துறையையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அடுத்த வாரம் மார்ச் மாதத்திற்கான பணவீக்கம் பற்றி மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது. இது இரட்டை இலக்கத்தை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ( பிப்ரவரியில் பணவீக்கம் 9.89 விழுக்காடாக இருந்தது.)

மொத்த விலை குறீயீட்டு எண் அட்டவணையில் மார்ச் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், பால் விலை 2%, சோளம் விலை 2%, பழங்கள்-காய்கறி, பயத்தம் பருப்பு, ராகி விலை தலா 1%, கடல் மீன் விலை 4% அதிகரித்துள்ளது.

மல்லி, மசாலா பொருட்கள், முட்டை விலை தலா 1%, குறைந்துள்ளது.

நிலக்கடலை, கொப்பரை தேங்காய் விலை தலா 1% குறைந்துள்ளது.

இயற்கை ரப்பர் விலை 21% அதிகரித்துள்ளது.

சென்ற வருடம் இதே காலத்தில் இருந்த விலையுடன் ஒப்பிடுகையில் பருப்பு, சிறு தானியங்களின் விலை 32.60%, பால் விலை 21.12%, பழங்களின் விலை 14.95%, கோதுமை விலை 13.34% உயர்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்