டாடா பவர்: சூரிய மின்சக்தி-காற்றாலை மின் உற்பத்திக்கு ரூ.13 ஆயிரம் கோடி முதலீடு
செவ்வாய், 16 மார்ச் 2010 (15:52 IST)
சூரிய ஒளி-காற்றைலை மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு டாடா பவர் நிறுவனம் ரூ.13 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளது.
டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா பவர் மின் உற்பத்தியில் 25 விழுக்காடு வரை மரபுசாரா மின் உற்பத்தியான சூரிய மின்சக்தி, காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு இறுதிக்குள் காற்றாலை மூலம் 2 ஆயிரம் மெகாவாட்டும், சூரிய மின்சக்தி வாயிலாக 250 மெகாவாட்டும் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
இது குறித்து டாடா பவர் நிறுவனத்தின் செயல் இயக்குநர் பன்மாலி அகர்வாலா, அந்நிறுவனத்தின் இதழில், சூரிய மின்சக்தி, காற்றைலை மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு ஏற்ற இடங்களை குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தேடி வருகின்றோம்.
தற்போது மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடாகா ஆகிய மாநிலங்களில் காற்றாலை மின்உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோம். இவற்றின் மூலம் 195 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்துடன் குஜராத் மாநிலத்தில் 100 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அரசு துறை நிறுவனம் அல்லாத தனியார் அனல் மின் உற்பத்தி நிறுவனங்களில் டாடா பவர் முதன்மையான இடத்தில் உள்ளது.