உத்தரபிரதேசத்தில் 450 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி
செவ்வாய், 9 மார்ச் 2010 (15:51 IST)
இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக அளவு கரும்பு உற்பத்தி செய்யும் மாநிலமான உத்தரபிரதேசத்தில், இந்த ஆண்டு சர்க்கரை உற்பத்தி அமோகமாக இருக்கும். இந்த வருடம் 450 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தியாகும் என்று தெரிகிறது.
இது குறித்து உத்தரபிரதேச கரும்பு கமிஷனர் எம்.போபாடி கூறுகையில், சென்ற பருவத்தில் 400 லட்சத்து 64 ஆயிரம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. இந்த பருவத்தில் மார்ச் 7 ஆம் தேதி வரை 410 லட்சத்து 84 ஆயிரம் சர்க்கரை உற்பத்தியாகி உள்ளது. பருவ இறுதியில் 450 லட்சத்து 28 ஆயிரம் டன் சர்க்கரை உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் 12 விழுக்காடு அதிகமாக சர்க்கரை உற்பத்தியாகும்.
இந்த பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் கரும்பு பிழிதல் தொடங்கும் போது 390 லட்சத்து 60 ஆயிரம் டன் சர்க்கரை மட்டுமே உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது சென்ற வருடத்தைவிட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சர்க்கரை சந்தைக்கு விற்பனைக்கு வரும் போது, சர்க்கரை விலை குறைய வாய்ப்பு உள்ளது. சென்ற வருடம் பல்வேறு மாநிலங்களில் கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால், சர்க்கரை தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை சமாளிக்க மத்திய அரசு இறக்குமதி வரி இல்லாமல் சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை, சர்க்கரை ஆலைகள் இறக்குமதி செய்து கொள்ள அனுமதி வழங்கியது.