சோயா விதைப்பு முடிந்து விட்டது. ஆனால் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெய்யும் மழையை பொறுத்தே, உற்பத்தி இருக்கும்.
தென்மேற்கு பருவமழை பல மாநிலங்களில், காலம் தாழ்ந்து பெய்துள்ளது. சில மாநிலங்களில் போதிய அளவு பெய்யவில்லை.
இந்நிலையில் சோயா உற்பத்தி குறித்து, சோயை பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் சங்க தலைவர் ராஜேஸ் அகர்வால் கூறும் போது, பருவமழை தாமதமானாலும், ஜுலை மாத தொடக்கத்திலேயே சோயா விதைப்பு பணி தொடங்கி விட்டது. கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் மழை, விவசாயிகள் அதிக பட்ச பரப்பளவில் சோயாவை விதைக்க உதவிகரமாக உள்ளது.
மத்திய பிரதேசத்தில் 52 லட்சம் ஹெக்டேரிலும், மகாராஷ்டிராவில் 25 லட்சம் ஹெக்டேரிலும் சோயா விதைப்பு முடிந்துள்ளது.
ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் போதிய அளவு மழை பெய்தால், மேலும் 5 லட்சம் ஹெக்டேரில் விதைக்க வாய்ப்பு உண்டு. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெய்யும் மழையை பொறுத்தே, சோயா உற்பத்தி இருக்கும் என்று கூறினார்.