ரஷியாவில் பொருளாதார-பாதுகாப்பு மாநாடு

சனி, 30 மே 2009 (12:03 IST)
தற்போது ஏற்பட்டுள்ள உலகாவிய பொருளாதார நெருக்கடியின் விளைவாக எழுந்துள்ள சிக்கல், உலக பாதுகாப்பு அம்சங்கள் பற்றி அடுத்து நடைபெற உள்ள பிரிக் நாடுகளின் மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று ரஷிய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் கூறினார்.

பிரேசில்,ரஷியா, இந்தியா,சீனா ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்றுள்ள அமைப்பு பிரிக். இந்த நான்கு நாடுகளின் ஆங்கில பெயர்களின் முதல் எழுத்தை கொண்டு பிரிக் என்று அழைக்கப்படுகிறது.

இந்த நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டம் மாஸ்கோவில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் ரஷிய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் பேசுகையில், பிரிக் அமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் நமது நாடுகளின் வளர்ச்சி, சர்வதேச பாதுகாப்பு, பொருளாதார, உணவு, எரிசக்தி ஆகியவை தொடர்ந்து கிடைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்படும். அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநாடுதான், பிரிக் நாடுகளின் முழு அளவிலான முதல் மாநாடு.

இன்றைய சூழ்நிலையில் இந்த நாடுகள்தான், உலக பொருளாதார வளர்ச்சியின் மைய கேந்திராமாக இருக்கிறது. இந்த நாடுகளின் மக்கள் தொகை, உலக மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகம் என்று கூறினார்.

பிரிக் அமைப்பு நாடுகளின் மாநாடு ஜுன் மாதம் 16 ஆம் தேதி ரஷியாவில் உள்ள யெகாடிரின்பர்க் நகரத்தில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், சீன அதிபர் ஹூ ஜின்டோ, ரஷியா, பிரேசில் அதிபர்கள் பங்கேற்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்