சிறு தொழில் வளர்ச்சி வங்கி, மகளிர் சுய உதவி குழுக்கள் போன்றவைகளுக்கு கடன் வழங்குவதற்காக ஏழு நகரங்களில் குறு கடன் வங்கிகளை திறந்துள்ளது.
மகளிர் சுய உதவி குழுக்களை அமைத்து, மேம்படுத்தும் பொறுப்பு சிட்பி என்று அழைக்கப்படும் சிறு தொழில் வளர்ச்சி வங்கிக்கு [Small Industries Development Bank of India (SIDBI)] அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கியின் சார்பில் 1999 ஆம் ஆண்டு தேசிய குறு நிதி உதவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் பிரிட்டனைச் சேர்ந்த சர்வதே மேம்பாட்டு துறை, [Department for International Development (DFID) UK ] ரோம் நகரில் இருந்து இயங்கும் விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியம் [International Fund of Agricultural Development (IFAD),Rome] ஆகியவைகளுடன் இணைந்து சிட்பி அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டம், இந்தியா முழுவதும் உள்ள ஏழைகள், வறுமை நிலையில் உள்ள மக்கள் குறிப்பாக பெண்களுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் குறு கடன் வசதி நிறுவனங்கள் அமைப்பதற்காக செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக, சிட்பி தனியாக சிட்பி குறு கடன் பவுன்டேஷன் என்ற துறையை தனியாக உருவாக்கியது.
தற்போது சுய உதவி குழுக்களுக்கு கடன் வசதி அளிப்பதற்காக, லக்னோ, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, புவனேஷ்வர், கவுகாத்தி ஆகிய ஏழு நகரங்களில், தனியாக குறு கடன் வங்கி சிறப்பு கிளைகளை நேற்று துவக்கியுள்ளது.