நிதிநிலை அறிக்கை- விவசாயிகள் கருத்தை கேட்க வலியுறுத்தல்
திங்கள், 9 பிப்ரவரி 2009 (13:36 IST)
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும் முன்பு, விவசாயிகள் கருத்தைக் கேட்க வேண்டும் என்று “தமிழ்நாடு கள் இயக்கம்” வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு, இதன் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 2009-10 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த அறிக்கையைத் தயாரிக்கும் பொருட்டு நிதியமைச்சர் அன்பழகன் தலைமையிலான குழுவினர், தொழிலதிபர்கள், வணிகர்கள் ஆகியோரை சந்தித்து, கருத்துகள், ஆலோசனைகளைக் கேட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் சுமார் 60 விழுக்காடு மக்கள் வேளாண்மையை நம்பியுள்ளனர். விவசாயிகளின் வாழ்க்கைத் தரமும், வாங்கும் சக்தியும் வெகுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. ஏராளமானோர் வேளாண்மையிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் ஒரு நாளைக்கு 48 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது பெரும் உணவுப்பஞ்சத்தில் முடியும் என்பது பொதுவான கருத்து.
தமிழக அரசு மற்றவர்களின் கருத்தைக் கேட்டறிந்ததுபோல், விவசாயிகளையும் அழைத்து, ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். இவ்வாறு செய்யாதது விவசாயிகளை இழிவுபடுத்தும் செயலாகும்.
எனவே நிதிநிலை அறிக்கை தயாரிக்கும்முன், விவசாயிகள் தரப்பையும் அழைத்து, கருத்துகள், ஆலோசனைகளைக் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.