பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.1 விழுக்காடாக குறையும் என்று மத்திய அரசு கணித்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார நெருக்கடியும், நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தகவல் தொழில் நுட்பம், ஜவுளி துறை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (மொத்த உள்நாட்டு உற்பத்தி ) சென்ற நிதி ஆண்டில் 9 விழுக்காடாக இருந்து. இது 2008-09 ஆம் நிதி ஆண்டில் 7.1 விழுக்காடாக குறையும் என்று மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.
பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு, ஏற்கனவே இந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி குறையும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதற்கு காரணம் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் துறைகள், விவசாய உற்பத்தி, மின் உற்பத்தி, நிதி தொடர்பான சேவை தொழில்கள் போன்றவற்றின் வளர்ச்சி குறைவே. அதே நேரத்தில் கனிம சுரங்க உற்பத்தி அதிகரித்துள்ளது.
2008-09 நிதி ஆண்டில் விவசாய துறை வளர்ச்சி 2.6% ஆக குறையும். (2007-08 நிதி ஆண்டில் வளர்ச்சி 4.9%). உற்பத்தி துறையின் வளர்ச்சி 4.1% ஆக குறையும். (2007-08 நிதி ஆண்டில் வளர்ச்சி 8.2%). கட்டுமானத்துறை வளர்ச்சி 6.5% ஆக குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. (2007-08 நிதி ஆண்டில் வளர்ச்சி 10.1%).
நிதி (வங்கி உட்பட), காப்பீடு, ரியல் எஸ்டேட் மற்ற வர்த்தகம் ஆகியவற்றின் வளர்ச்சி 8.6% ஆக இருக்கும். (2007-08 நிதி ஆண்டில் வளர்ச்சி 11.7%).
அந்நிய நாடுகளுடனான வர்த்தகம், நட்சத்திர விடுதிகள், போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகியவற்றின் வளர்ச்சி 10.3% ஆக இருக்கும். (2007-08 நிதி ஆண்டில் வளர்ச்சி 12.4%).
இவை மத்திய புள்ளி விபரங்களை திரட்டும் அமைப்பின் முன் மதிப்பீடுதான். இவை மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.