சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ), அந்நிறுவனத்தின் தலைமை வழங்கல் அதிகாரியான (Chief Delivery Officer) ஏ.எஸ். மூர்த்தியை நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு இன்று நியமித்துள்ளது.
முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பார்த்தோ எஸ். தத்தா, சத்யம் நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இத்தகவலை நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் பி.சி. குப்தா வெளியிட்டார்.
பணிக்கான முதலீடாக (Working Capital) சத்யம் நிறுவனதின் செயல்பாட்டிற்கு 600 கோடி ரூபாய் கடன் வழங்க வங்கிகள் சம்மதித்திருப்பதாகவும், சத்யம் நிறுவன ஊழியர்களுக்கு இதன்மூலம் நிவாரணம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
சத்யம் நிறுவன வாரியத்தின் முழுநேர இயக்குனர் இல்லாதபோது, தலைமை நிர்வாக அதிகாரியுடன் இணைந்து செயல்பட நிர்வாக அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என்று சத்யம் நிறுவன சட்ட வல்லுநர் குறிப்பிட்டார்.
தலைமை நிதி அதிகாரி இயக்குனர்கள் குழுவில் இடம்பெற மாட்டார் என்றும், நிதி தொடர்பான விஷயங்களைக் கையாளவும், அவை குறித்த புகார்களை விசாரிக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு என்றும் அவர் கூறினார்.