சத்யம் கம்ப்யூட்டர் விசாரணை விரைவுபடுத்தப்படும்-செபி

வியாழன், 5 பிப்ரவரி 2009 (16:36 IST)
சத்யம் கம்யூட்டர் நிறுவனத்தில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றிய விசாரணை விரைவுபடுத்துவதுடன், திறமையாக புலனாய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று செபி சேர்மன் சி.பி.பாவே கூறினார்.

மும்பையில் இன்று இந்திய தொழிலக கூட்டமைப்பு [Confederation of Indian Industry (CII)] ஏற்பாடு செய்திருந்த “நிறவனங்களின் ஒளிமறைவற்ற நிர்வாகம“ கருத்தரங்கை, பங்குச் சந்தையை கண்காணிக்கும் அமைப்பான செபியின் தலைவர் சி.பி.பாவே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை, பல்வேறு அமைப்புகளும் விசாரிக்கின்றன. இந்த விசாரணை விரைவாகவும், திறமையுடன் நடத்துவது சவால் தான்.

அதே நேரத்தில் இந்த முறைகேடு பற்றிய தகவல் வெளியானவுடன், செபியின் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் பாராட்டும் படியாக உடனே நடவடிக்கையில் இறங்கினார்கள். அத்துடன் இரண்டே நாட்களில், இதன் நிர்வாகத்தை மேற்கொள்ள மத்திய அரசு இயக்குநர்களை நியமித்தது.

இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் செபி தனது கடமையை எவ்வித விருப்பு-வெறுப்பு இன்றி, திறமையாக நிறைவேற்றியது. இந்த பிரச்சனையின் ஆழத்தை புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு நடவடிக்கையில் இறங்கினால் நெருக்கடியே ஏற்படும். இவ்வாறு நடக்காமல் செபி முறையாக நடவடிக்கையில் இறங்கியது.

செபி, நிஃப்டி, சென்செக்ஸ் பிரிவில் உள்ள நிறுவனங்களின் தணிக்கை அறிக்கையை, நிபுணர்கள் குழு ஆய்வு செய்துள்ளது. இந்த குழு அறிக்கை வழங்கியுள்ளது. இதன் மீது பரிசீலனை நடந்துவருகிறது. இதே போல் மற்ற நிறுவனங்களின் தணக்கை அறிக்கையும் ஆய்வு செய்யப்படும்.

தற்போது கணக்கு தணிக்கையாளர்களை குறிப்பிட்ட வருடம் மட்டுமே நியமிக்க வேண்டும். அதற்கு பிறகு வேறு தணிக்கையாளர்களை மாற்ற வேண்டும் என்ற யோசனை கூறப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச அளவிலான தணிக்கை நிறுவனங்களையும், வெளி தணிக்கையாளர்களாக நியமிக்கலாம் என்ற ஆலோசனையும் கூறப்படுகிறது. இவற்றின் சாதக-பாதக அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட வேண்டும்.

ஒரு நிறுவனத்தை துவங்கியவர்கள் அல்லாத, அந்த நிறுவனத்தைச் சேராத, வெளி இயக்குநர்கள், குறிப்பாக முதலீட்டு நிறுவனங்கள் சார்பில் பங்கு பெறும் இயக்குநர்கள் நிறுவனங்களின் நடவடிக்கையில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்க வேண்டும். இத்துடன் பங்குகளை வைத்திருக்கும் மற்றவர்களின் ஒத்துழைப்பையும் பெற வேண்டும். பங்குகளை வைத்திருப்பவர்கள் நிறுவனங்களின் நடவடிக்கையை கண்காணிப்பதில் ஆர்வமுடன் செயல்படவேண்டும் என்று பாவே கூறினார்.

தற்போதுள்ள விதிமுறைகளை மாற்றுவதால் பிரச்சனைகள் ஏற்படுமா என்பது பற்றி பாவே கூறுகையில், தவறுகள் நடைபெறாமல் இருப்பதற்கு ஏற்றவாறு விதிமுறைகள் திருத்தப்படும் போது, நிறுவனங்களைச் சேராதா சுயேச்சை இயக்குநர்களின் விரும்பத்தகாத தலையீடு இல்லாத வகையில் பார்த்துக் கொள்ளப்படும். செபி ஏற்கனவே சுயேச்சை இயக்குநர்களுக்கு பயிற்சி அளிக்க, சி.ஐ.ஐ, நேஷனல் இன்ஸ்டியூட் பார் செக்யூரிட்டி மேனெஜ்மென்ட் இணைந்து பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இதே போல் மற்ற அமைப்புகளுடன் இணைந்து பயிற்சி வகுப்புகளை நடத்தவும், செபி விரும்புகிறது. இந்த மாதிரியான பயிற்சி வகுப்புகளால், சுயேச்சை இயக்குநர்களின் பற்றாக்குறை தீரும் என்று பாவே கூறினார்.

முன்னதாக சி.ஐ.ஐ தலைவர் கே.வி.காமத் பேசுகையில், சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முறைகேடு, நிறுவனங்களின் ஒளிமறைவற்ற நிர்வாகம் பற்றி பரிசீலிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்