பணவீக்கம் 5.07% ஆகக் குறைந்தது

வியாழன், 5 பிப்ரவரி 2009 (13:16 IST)
நாட்டின் பணவீக்க விகிதம் கடந்த இருவாரங்களாக அதிகரித்து வந்த நிலையில், பழங்கள், காய்கறிகள் மற்றும் உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைந்ததன் விளைவாக 5.07 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

கடந்த மாதம் (ஜனவரி) 24ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 0.57 விழுக்காடு அளவுக்கு குறைந்து 5.07 விழுக்காடாக இருந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் இந்த விகிதம் 5.64 விழுக்காடாக இருந்தது.

கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் பணவீக்க விகிதம் 4.78 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதன்மைப் பொருட்கள் பிரிவைப் பொருத்தவரை பழங்கள், காய்கறிகள் மற்றும் கம்பு ஆகியவற்றின் விலைகளில் முந்தைய வாரத்தைக் காட்டிலும் தலா 2 விழுக்காடு குறைவு ஏற்பட்டுள்ளது. காபியை (கொட்டை) பொருத்தவரை ஒரு விழுக்காடு விலை குறைந்துள்ளது.

கச்சா ரப்பர், நிலக்கடலை விதை, எள் ஆகியவற்றின் விலைகள் முறையே 6, 3, மற்றும் ஒரு விழுக்காடு அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது.

எஃகு பாளங்கள், அலுமினியப் பொருட்கள், கம்பிகள், மற்றும் பாளங்களும் குறிப்பிடத்தக்க அளவு விலை குறைவை எதிர்கொண்டதால், பணவீக்கம் விகிதம் குறைந்திருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தவிட்டு எண்ணெய், சர்க்கரை, காபி பொடியின் விலை வீழ்ச்சியால் உற்பத்திப் பொருட்களின் விலைக் குறியீடு 0.5 விழுக்காடு குறைந்திருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

கம்பளி, சணல், தார்ப்பாய் ஆகியவற்றின் விலை வீழ்ச்சியால் ஜவுளி பிரிவு விலைக் குறியீடு 0.1 விழுக்காடு குறைந்தது.

என்றாலும் எரிபொருள் விலைக் குறியீடு 0.6 விழுக்காடு உயர்வை எதிர்கொண்டுள்ளது.

நாஃப்தா (15 விழுக்காடு), எரி உலை எண்ணெய் (2 விழுக்காடு), இலகு ரக டீசல் (2 விழுக்காடு) ஆகியவற்றின் விலைகளில் உயர்வு காரணமாக எரிபொருள் விலைக் குறியீடு உயர்வைச் சந்தித்ததாக மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்