தென் மாவட்ட தொழில் வளர்ச்சி கலந்துரையாடல்

புதன், 4 பிப்ரவரி 2009 (15:24 IST)
தென்மாவட்ட தொழில் வளர்ச்சிக்காக மதுரையில் வரும் 7 ஆம் தேதி உயர்நிலைக் குழு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக, வேலம்மாள் கல்வி அறக்கட்டளைத் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் தெரிவித்தார்.

இது பற்றி நேற்று அவர் கூறுகையில், தென் தமிழகத்தில் தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வழிகாட்டவும், வெற்றி பெற்ற நிறுவனங்கள் ஒன்றுகூடி கலந்தாலோசனை செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பிப்.7 ஆம் தேதி உயர்நிலைக் குழு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பசுமலையில் உள்ள தாஜ் கார்டன் ரிட்ரீட் ஹோட்டலில் நடைபெறும். இதில் சிப்காட் தலைவர் டாக்டர் என்.கோவிந்தன், டிட்கோ தலைவர் ஏ.இராமசுந்தரம், சிட்கோ தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தொழில் அதிபர்கள்- தொழில்முனைவோர் இடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சிவகங்கை மாவட்டத்தில் கிராஃபைட் தொழிற்சாலை தொடங்குதல், உலகத் தரம் வாய்ந்த ஐ.ஐ.எம், ஐ.ஐ.டி போன்று நிறுவனங்களைக் கூட்டு முயற்சியில் தொடங்குதல், மத்திய அரசின் பல்கலைக்கழகங்களைத் தென் மாவட்டங்களில் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளுதல் உள்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்