சிறப்பு பொருளாதார மண்டலங்களில் ஏற்றுமதி நான்கு மடங்கு உயர்வு
புதன், 4 பிப்ரவரி 2009 (15:23 IST)
இந்தியாவில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகளின் ஏற்றுமதி கடந்த நான்காண்டுகளில் 418 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு பொருளாதார மண்டங்களின் ஏற்றுமதி 2003-04 நிதி ஆண்டில் ரூ.நாறபத்தி இரண்டாயிரத்து ஆறுநூற்றி நாற்பத்தி ஒரு (ரூ.42,641) கோடியாக இருந்தது. இவற்றின் ஏற்றுமதி 2007-08 நிதி ஆண்டில் ல் ரூ.2,21,066 கோடியாக உயர்ந்துள்ளது என்று கமல்நாத் தெரிவித்துள்ளார்.
புது டெல்லியில் நேற்று, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகளுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு நிகழ்ச்சியில் கமல்நாத் உரையாற்றும் போது, மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், இவை வேலை வாய்ப்பு அதிகரிப்பதற்கும். உற்பத்தி திறனை உயர்த்துவதற்கும் கணிசமான பங்காற்றியுள்ளன. அரசுக்கும் தொழில் துறையினருக்கும், பங்கேற்புடன் கூடிய அணுகுமுறை இருந்தததால்தான் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வெற்றியடைந்தது. கடந்த மூன்றாண்டுகளில் இவற்றில் ரூ.90 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மண்டலங்கள் மூலம் 2.27 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதி ரூ.70 ஆயிரம் கோடியை தொட்டுள்ளதாகவும், இது முந்தைய ஆண்டைவிட அதிகம் என்றும் கமல்நாத் தெரிவித்தார்.
கமல்நாத் ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கினார்.