உயர் அதிகாரிகளக்கு சம்பள கட்டுப்பாடு-ஒபாமா

புதன், 4 பிப்ரவரி 2009 (13:56 IST)
அமெரிக்காவில் அரசு உதவி பெறும் நலிவடைந்த நிறுவனங்களின் இயக்குநர்கள், உயர் அதிகாரிகள் போன்றவர்களுக்கு அதிக பட்ச சம்பளம் நிர்ணயிக்க அதிபர் ஒபாமா நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

அமெரிக்காவில் வங்கிகள், பல தொழில் வர்த்தக நிறுவனங்கள் சமீபகாலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் உட்பட சில நிறுவனங்கள் திவாலா அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இவை மீண்டும் இயங்கும் வகையில், நிதி உதவி அளிக்க அமெரிக்க அரசு முடிவு செய்தது.

இதற்கு முன் அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் காலத்திலேயே 700 பில்லியன் டாலர் அளவிற்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் மிகப்பெரும் நிறுவனங்களான சிட்டி குழுமம்(சிட்டி பாங்க்), பாங்க் ஆப் அமெரிக்கா, அமெரிக்கன் இன்டர்நேஷனல் குருப், ஜெனரல் மோட்டார்ஸ், கிரிஸ்லர் ஆகியவை கடும் நெருக்கடியில் உள்ளன.

இவைகளுக்கு அமெரிக்க அரசு நிதி உதவி செய்ய போகிறது.

அமெரிக்காவிலேயே மற்றொரு தரப்பினர் மக்கள் வரிப்பணத்தில் இருந்து, நிர்வாக சீர்கேடுகளால் நஷ்டமடைந்துள்ள நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசின் நிதி உதவி பெறும் நிறுவனங்களின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், இயக்குநர்கள் போன்றவர்களுக்கு அதிகபட்ச ஊதியம் நிர்ணயிக்க புதிய அதிபர் ஒபாமா நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக நியுயார்க் டைம்க் தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு ஒபாமா நிர்வாகம் அதிக பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க உள்ளது. இதன் படி ஊதியமாக 5,00,000 டாலராக நிர்ணயிக்கப்படும் என்று விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தாக நியுயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அத்துடன் இவர்களுக்கு போனஸ் போன்ற இதர சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது. இந்த நிறுவனங்களில் பங்குகள் வைத்திருந்தால், அதன் லாப ஈவு மட்டும் (டிவிடென்ட்) பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படும் என்று நியுயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்