ராமலிங்க ராஜு விசாரணை- உச்ச நீதிமன்றத்தில் செபி மனு.
திங்கள், 2 பிப்ரவரி 2009 (12:18 IST)
சத்யம் கம்ப்யூட்டர் சேர்மன் ராமலிங்க ராஜுவிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, இன்று உச்ச நீதி மன்றத்தில் செபி மனு தாக்கல் செய்தது.
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் சேர்மன் ராமலிங்க ராஜு, கணக்கில் ரூ.7,100 கோடி முறைகேடு செய்ததாக தன்னிலையாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து அவரையும், அவரது தம்பியும் சத்யம் கம்ப்யூட்டரின் மேலாண்மை இயக்குநருமான ராம ராஜு, தலைமை நிதி அதிகாரி சீனிவாஸ் ஆகியோரை ஆந்திர மாநில சி.பி-சி.ஐ.டி காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு ஹைதராபாத் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.
பங்குச் சந்தையை கண்காணித்து கட்டுப்படுத்தும் செபி, முன்னதாக ராமலிங்க ராஜுவிடம் விசாரணை நடத்த அனுமதிக்கும் படி, ஹைதராபாத் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதற்கு அடுத்து செபி ஹைதராபாத் உயர்நீதி மன்றத்தில், ராமலிங்க ராஜுவிடம் விசாரணை நடத்த அனுமதிக்கும் படி மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதி மன்றம் எதிர் தரப்பினரின் கருத்தை கேட்காமல் அனுமதி கொடுக்க முடியாது என்று கூற, விசாரணையை வருகின்ற 9 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
இந்நிலையில், இன்று உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு நீதி மன்றத்தில், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.வி.வாஷான்வதி, செபியின் சார்பில் மனு தாக்கல் செய்தார்.
அதில் ராமலிங்க ராஜு, மற்ற மூவரிடமும் செபி விசாரணை நடத்த அனுமதிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன் மீதான விசாரணை நாளை எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்தார்.