ரியல் எஸ்டேட் பாதிப்பில்லை

வெள்ளி, 30 ஜனவரி 2009 (16:46 IST)
பொருளாதார நெருக்கடியால், இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை பாதிக்கப்படாது என்று பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொது மேலாளர் பட்நாயக் தெரிவித்தார்.


அகமதாபாத்தில் நேற்று மாலை “ரியல் எஸ்டேட் துறைக்கு வங்கி கடன் கிடைப்பதில் உள்ள வாய்ப்புகளும்-சவால்களும“ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாரத ஸ்டேட் வங்கியின், குஜராத் மண்டல தலைமை பொது மேலாளர் ஹெச்.சி.பட்நாயக் உரையாற்றினார்.

அப்போது அவர், இந்தியாவின் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால், 27 லட்சம் வீடுகள் பற்றாக்குறை உள்ளது. அத்துடன் மக்கள் தொகை 2 விழுக்காடு அதிகரித்து வருகிறது.

இதனை ஒப்பிட்டால், தற்போது பொருளாதார வளர்ச்சி குறைந்து இருந்தாலும், இது ரியல் எஸ்டேட் துறையை பாதிக்காது. மக்கள் தொகை அதிகரிப்பு, அரசு எடுக்கும் சாதகமான நடவடிக்கை ஆகியவைகளால் தற்போதைய நெருக்கடியால் ரியல் எஸ்டேட் துறை பாதிக்காது. எனவே கவலை படுவதற்கு எவ்வித காரணமும் இல்லை. இந்த துறைக்காக வீடு கடன் வட்டி குறைப்பு உட்பட பல சலுகைகளை பாரத ஸ்டேட் வங்கி, ரிசர்வ் வங்கி, மத்ிய அரசு அறிவித்துள்ளன.

சமீபத்தில் நடந்த சர்வதேச குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, பாரத ஸ்டேட் வங்கி குஜராத் மாநில அரசுடன் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதில் 20 முதல் 25 விழுக்காடு வரை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யப்படும்.

வீடு கட்டும் திட்டத்திற்கு கடன் வழங்கும் திட்டத்தை அனுமதிப்பதில் வங்கிக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. அதே நேரத்தில் விவசாய நிலங்களை, மற்ற பயன்பாட்டிற்கான அனுமதி பெறுவது, முத்திரை கட்டணத்தை குறைப்பது, மனையில் வீட்டின் பரப்பளவை அதிகரிப்பது போன்றவைகளை விரைவாக செய்ய வேண்டும் என்று பட்நாயக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்