திருப்பூர் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பால் தொழில் வரியை உயர்த்தும் தீர்மானம் தோல்வி அடைந்தது.
இதையடுத்து அரசின் முடிவுக்கே தீர்மானம் அனுப்பப்படும் என்று மேயர் க.செல்வராஜ் தெரிவித்தார்.
திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தொழில்வரி உயர்வு குறித்து தீர்மானம் மன்ற அனுமதிக்கு வைக்கப்பட்டது.
தொடர் மின்தடை, விலை வாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் தற்போது தொழில்கள் முடக்கம் அடைந்துள்ளன. இந்நிலையில் தொழில்வரியை உயர்த்துவது மேலும் தொழிலை நசுங்கச் செய்யும். எனவே தொழில்வரி உயர்வு தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக கூறி சிவபாலன் தலைமையில் மதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
தொழில்வரி உயர்வையே முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து ராதாகிருஷ்ணன் தலைமையில் அ.இ.அ.திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர். அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் தொழில்வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து பேசிய திமுக உறுப்பினர் பழனிச்சாமி, மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், தொழில் வளர்ச்சிக்கும் தொழில்வரி உயர்வு அவசியமாகிறது. எனவே, திருப்பூர் மாநகராட்சியில் குறைந்தபட்சமாக 25 விழுக்காடு அளவுக்கு தொழில்வரி உயர்த்த வேண்டும் என்று கூறினார்.
மாமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து இறுதியாக பேசிய மேயர் க.செல்வராஜ், தொழில்வரியை ரத்து செய்வதற்கு மாநகராட்சிக்கு அதிகாரம் கிடையாது. மாமன்றக் கூட்டத்தில் நடந்த தொழில்வரி உயர்வு தொடர்பான மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு, ஆதரவு குறித்த விவாத அறிக்கைகள் (மினிட் நோட்) அரசுக்கு அனுப்பப்படும். இதையடுத்து தொழில்வரி உயர்வு குறித்தும், அதன் அளவு குறித்தும் அரசே முடிவு செய்யும் என்று கூறினார்.