விழுப்புரம் மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் முதல் கரும்பு விவசாயிகளுக்கு தனியாக குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பல ஊர்களில் கரும்பு பயிரிடப்படுகிறது. கரும்புக்கு வெட்டுக் கூலி அதிகம் ஆகிறது. எனவே கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும், வெட்டுக் கூலி, வண்டி வாடகை ஆகியவற்றை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்ற கோரிக்கைகளை கரும்பு விவசாயிகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். இதற்காக விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் கரும்பு விவசாயிகளின் நலன் கருதி பிப்ரவரி முதல் அவர்களுக்கு தனியாக குறைதீர்க்கும் கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி முடிவு செய்துள்ளார்.
விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டங்கள் நடைபெறும்போது, விவசாயம் சாரத கோரிக்கைகளை பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் எழுப்புகின்றனர். இதனால் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை எழுப்ப முடியாமல் போகிறது. விவசாயிகளின் கோரிக்கைகள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன.
இதுபோன்ற நிலை கரும்பு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அதுபோல் கரும்பு விவசாயிகளுக்கு தனியாக குறைதீர் கூட்டம் நடத்தினாலும் கரும்பு விவசாயம் சார்ந்த கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க கூடாது என்று விவசாயிகள் பரவலாக கருத்து தெரிவிக்கின்றனர்.