சத்யம் கம்ப்யூ கடன் கொடுக்கவில்லை-கனரா வங்கி

வெள்ளி, 23 ஜனவரி 2009 (16:08 IST)
கனரா வங்கி இந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலண்டில் ரூ.702 கோடி நிகரலாபமாக பெற்றுள்ளது.

இன்று பெங்களூருவில் கனரா வங்கியின் சேர்மனும், மேலாண்மை இயக்குநருமான ஏ.சி. மகாஜன், இந்த நிதி ஆண்டில் டிசம்பர் மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டு இலாப-நஷ்ட கணக்குகளை வெளியிட்டார்.

அவர் அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது நெருக்கடியில் சிக்கியுள்ள சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு, கனரா வங்கி நேரடியாகவோ, மறை முகமாகவோ கடன் வழங்கவில்லை. அத்துடன் அதன் பங்குகளிலும் முதலீடு செய்யவில்லை என்று தெரிவித்தார்.

இந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில், கனரா வங்கியின் மொத்த வருவாய் ரூ.5,382.90 கோடியாக உள்ளது. இதில் நிகர இலாபம் ரூ.701.50 கோடி. ( சென்ற நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் மொத்த வருவாய் 4,096.60 கோடி. நிகர இலாபம் ரூ.458.83 கோடி).

வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.3,03,759 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் இந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் ரூ.42,449 கோடி அதிகரித்துள்ளது.

வங்கியின் வைப்பு நிதி ரூ.1,74,839 கோடியாக அதிகரித்துள்ளது. அதே போல் வங்கி கொடுக்கும் கடன் ரூ.1,28,920 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு வைப்பு நிதி 21% அதிகரித்துள்ளது. இதே போல் வங்கி கொடுக்கும் கடனும் 31% அதிகரித்துள்ளது.

இதன் ஒரு பங்கு வருவாய் 2008-டிசம்பர் இறுதியில் ரூ.33.01 ஆக அதிகரித்துள்ளது. ( 2007-டிசம்பர் ரூ.26.85)

முன்னுரிமை கடன் பிரிவில் வழங்கும் கடன் அளவு 17% அதிகரித்துள்ளது. இந்த பிரிவில் ரூ.45,972 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

விவசாய பிரிவு கடனும் 16% அதிகரித்துள்ளது. விவசாயத்திற்கு ரூ.18,904 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 23 லட்சம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளன.

சிறு, நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு வழங்கும் கடன் 26% அதிகரித்துள்ளது. இந்த பிரிவுக்கு ரூ.21,440 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறு தொழில்களுக்கு மட்டும் ரூ.15,410 கோடி வழங்கப்பட்டுள்ளது

சில்லறை, தனிநபர் கடன் பிரிவில் ரூ.17,970 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று மகாஜன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கனரா வங்கியின் கிளைகளை அந்நிய நாடுகளில் ஜோகன்பர்க், பிராங்பர்ட், மஸ்காட், மனாமா, கத்தார், லிசிஸ்டர், நியுயார்க், சா-பாலியோ, தர்-இ-சலாம், டோக்கியோ உட்பட சர்வதேச அளவில் 21 முக்கிய நகரங்களில் திறக்க, ரிசர்வ் வங்கியிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளது என்று மகாஜன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்