புகையிலை மாற்று பயிர் ஆய்வு திட்டம்

வெள்ளி, 23 ஜனவரி 2009 (10:54 IST)
பீடி மற்றும் புகையிலை பயிருக்கு மாற்றுப் பயிர் விவசாயம் கண்டுபிடிப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக ராஜமுந்திரியில் உள்ள மத்திய புகையிலை ஆய்வு மையத்திற்கு ரூ.2.17 கோடி நிதியுதவியை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.

பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதே நேரத்தில் புகையிலைப் பயிரிடும் விவசாயிகளுக்கு மாற்று விவசாயம் கண்டுபிடிப்பதில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இது தொடர்பான முன்னோடி திட்டத்தை மேற்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் ரூ.2.17 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

இந்த ஆய்வு வேடசந்தூர் (தமிழ்நாடு), நந்தியால் (ஆந்திரா), ஆனந்த் (குஜராத்), தர்மாஜ் (குஜராத்), நிபானி (கர்நாடகா), மற்றும் தினாட்டா (மேற்கு வங்காளம்) ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும்.

இந்திய விவசாய ஆய்வு கழகம் மற்றும் ராஜமுந்திரி மத்திய புகையிலை ஆய்வு மையத்துடன் இணைந்து ஆலோசனை செய்து இந்த முன்னோடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் நோக்கம் பீடி மற்றும் வாயில் மெல்லும் புகையிலைக்கு மாற்று பயிர் கண்டுபிடிப்பதே. பல்வேறு விவசாய-சுற்றுச் சூழல் துணை மண்டலங்களில் மூன்றாண்டுகளில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும்.

கரும்பு, காய்கறிகள், வெள்ளை பூண்டு, மைதா, பழங்கள், மிளகு, பருத்தி போன்ற பயிர்களை விவசாயம் செய்யும்படி புகையிலை பயிரிடும் விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முன்னதாக இந்தியாவில் மஞ்சள், வெங்காயம், உருளைக்கிழங்கு, வெள்ளை பூண்டு, கடுகு, கரும்பு போன்றவைகள் வாயில் மெல்லும் புகையிலைக்கு மாற்று பயிராக கருதப்பட்டது. பீடி புகையிலை பொருட்களுக்கு மாற்றாக பருத்தி, மைதா, சூரியகாந்தி, வேர்க்கடலை, சோயாபீன், மிளகாய் போன்றவையும் பரிந்துரைக்கப்பட்டது.


இந்த முன்னோடித் திட்டத்தின் படி, விவசாயிகளுக்கு மாற்று பயிரிடும் காலத்தில், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஆய்வு செய்யும். இதில் சந்தை ஆதரவு, வேளாண் ஆய்வு உள்ளிட்டவை அடங்கும். இந்த திட்டத்தின் பணிகள் குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் ஆண்டுதோறும் ஆய்வு செய்யும்.

உலகில் புகையிலை பயிரிடுவதில் சீனா மற்றும் பிரேசில் நாடுகளுக்கு அடுத்தப்படியாக இந்தியா 3 வது இடத்தில் உள்ளது. ஆனால் புகையிலையை பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 40 விழுக்காடு புற்றுநோய்கள் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் உண்டாகிறது. அத்துடன் ஆண்டுதோறும் 8 முதல் 9 லட்சம் இந்தியர்கள் புகையிலை தொடர்பான நோயினால் மரணமடைகின்றனர்.

உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் கணக்குபடி 2,90,000 விவசாயிகள் பீடி புகையிலை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் 1993-94 ஆம் ஆண்டில் தேசிய மாதிரி ஆய்வு கணக்கின்படி 2,634,000 பேர் பீடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எப்படியிருந்தாலும் ஐஎம்ஆர்டி (1996) அறிக்கையின்படி 5.5 மில்லியன் மக்கள் பீடி தொழிலில் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

பீடி உற்பத்தி துறையில் 7.4 விழுக்காட்டினர் பேர் ஈடுபட்டுள்ள நிலையில் இதில் 75% பீடி தொழிலாளர்கள் பெண்கள். இது புகையிலை பயிரிடும் தொழிலாளர் அளவில் 44%, தவிர பீடித் தொழில் துறையில் நேரடியாக 2.2% மலைவாழ் மக்கள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பீடி மற்றும் மெல்லும் புகையிலை பயிர்களுக்கு புகையிலை கமிட்டி/எம்எஸ்பி எப்போதும் ஆதரவு அளித்ததில்லை. உலக சுகாதார அமைப்பின்படி புகையிலை விநியோகத்தை தடுக்க அதற்கு மாற்று பயிர் ஆய்வு மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். இதனால் இந்த முன்னோடித் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்