இந்தியா- கனடா பொருளாதார உடன்படிக்கை

வியாழன், 22 ஜனவரி 2009 (15:03 IST)
இந்தியாவும் கனடாவும், விரிவான பொருளாதார கூட்டு உடன்படிக்கையை மேற்கொள்வது தொடர்பான இருதரப்பு பேச்சுக்களை துவக்க ஒப்புக் கொண்டுள்ளன.

கனடா நாட்டு அமைச்சர் ஸ்டாக்வெல் டேயை, அண்மையில் புது டில்லியில் மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்சர் கமல்நாத் சந்தித்துப் பேசினார்.

இது பற்றி கமல்நாத் கூறுகையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார கூட்டினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இருதரப்பும் உறுதியுடன் இருப்பதாகவும், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் இருநாடுகளிலும் உள்ள தொழில் துறையினருக்கு புதிய வாய்ப்புகளை அளிக்கும். என்று தெரிவித்தார்.

கனடா நாட்டு அமைச்சர் ஸ்டாக்வெல் டே, விரிவான வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுக்களை அதிகாரிகள் மட்டத்தில் துவக்குவதற்கு இருநாடுகளும் ஒப்புக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இருதரப்பு வர்த்தகத்தில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் அதிக அளவிலான முதலீட்டு வாய்ப்புகளை, குறிப்பாக உள்கட்டமைப்பு, வேளாண்மை தொடர்பான துறைகளில், இருநாடுகளும் பயன்படுத்தி கொள்ள வேண்டியுள்ளது என்று இரு அமைச்சர்களும் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்