உழவர் சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரிப்பு

வியாழன், 22 ஜனவரி 2009 (11:41 IST)
கம்பம் உழவர் சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. இங்கு தினந்தோறும் சுமார் 30 ஆயிரம் கிலோ காய்கறிகள் விற்பனையாகின்றன.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் காய்கறிகள் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. இவற்றை விவசாயிகள் விற்பனை செய்ய கம்பம் உழவர் சந்தையில் 48 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு தினந்தோறும் தக்காளி, பெரிய வெங்காயம், முறுக்கு பீன்ஸ், சிறிய வெங்காயம், பீன்ஸ், அவரை, வெண்டை, மிளகாய் ஆகியவற்றை விவசாயிகள் அதிக அளவு விற்பனைக்கு கொண்டுவருகின்றனர். இந்த உழவர் சந்தையில் தினந்தோறும் சராசரி 30 ஆயிரம் கிலோ காய்கறிகள் விற்பனையாகின்றன.

இங்கு காய்கறிகள் விலை குறைவாக உள்ளது.

கம்பம் உழவர் சந்தை செயல் அதிகாரி தெய்வேந்திரன் கூறுகையில், இங்கு கடந்த ஆண்டு தினசர் 23 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கிலோ காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.

இந்தாண்டு 30 ஆயிரம் கிலோ காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனைக்குப் பிறகு மீதமுள்ள காய்கறிகளை பாதுகாக்க, குளிர்பதனக் கூடம் அமைக்கும் பணி விரைவாக நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்