சத்யம் கம்ப்யூட்டரை வாங்கும் எண்ணம் இல்லை-பிரேம்ஜி
புதன், 21 ஜனவரி 2009 (18:00 IST)
பிரச்சனைக்குள்ளாகியுள்ள சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை வாங்கும் எண்ணம் இல்லை என்று விப்ரோ சேர்மன் பிரேம்ஜி திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில், விப்ரோ மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டு இலாப-நஷ்ட கணக்கை வெளியிட்ட பிறகு, பிரேம்ஜி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், எங்களுக்கு சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தையோ அல்லது மாய்டாஸ் நிறுவனத்தையோ வாங்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார்.
விப்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் வாஷானி கூறுகையில், ஒரே வாடிக்கையாளர், இரண்டு நிறுவனங்களுக்கும் பணிகளை கொடுக்கின்றனர். சத்யம் கம்ப்யூட்டரின் சில வாடிக்கையாளர்கள், அவர்களின் பணி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக எங்களை தொடர்பு கொண்டுள்ளனர். நாங்கள் மற்றவர்களை மதிப்பது போலவே அவர்களையும் நடத்துவோம்.
நாங்கள் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை வெறுத்து ஒதுக்கவில்லை. அவர்களை வேலைக்கு எடுக்கும் போது, கவனமாக ஆராய்வோம் என்று தெரிவித்தார்.